Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கில் இருந்து விலக்கு: கட்டுமான பணிகள் தீவிரம்

ஏப்ரல் 26, 2020 11:11

திருச்சி: ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதால் திருச்சியில் கட்டுமான பணிகள் தொடங்கின.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு சில பணிகளை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும் தமிழக அரசின் நிறுவனங்கள் 33 சதவீத ஊழியர்களுடனும் செயல்பட தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் ஊரடங்கின்போது விலக்கு அளிக்கப்பட்ட சில பணிகளும் தொடங்கப்பட்டு விட்டன. 

அதன்படி பாசன பணிகள் ஏரிகள் வாய்க்கால்களில் தூர்வாரும் பணி உள்ளிட்ட ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகளும் தொடங்கப்பட்டு விட்டன. திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் தில்லைநகர் சாஸ்திரி சாலை சந்திப்பில் இருந்து சாலையின் நடுவே சாலை தடுப்பு சுவர் (சென்டர் மீடியன்) அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அவ்வழியாக வாகன போக்குவரத்து ஏதும் இல்லை என்பதால் எவ்வித இடையூறும் இன்றி ஆண் பெண் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். மேலும் சாலையோரம் சாக்கடை கழிவுநீர் செல்வதற்கான வாய்க்காலும் கான்கிரீட் மூலம் அமைக்கும் பணி நடந்தது.

மேலும் சில இடங்களில் கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. அதேவேளையில் கட்டிட தொழிலாளர்களுக்கு பஸ் ஆட்டோ வாகன போக்குவரத்து இல்லாததால் இருசக்கர வாகனத்திலேயே பணிக்கு வந்தனர். மேலும் நகர்ப்புறம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான நெல் அரவை ஆலைகளும் செயல்பட தொடங்கின. திருச்சி அரியமங்கலம் பகுதியில் உள்ள நெல் அரவை ஆலை ஒன்றில் மூட்டைகளில் உள்ள நெல்லை அவித்து அவற்றை மில் வளாகத்தில் காயவைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் மாவு பருப்பு மில்களும் செயல்பட்டன.

தலைப்புச்செய்திகள்