Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தூய்மை பணியாளர்களுக்கு உளவியல் ஆலோசனை

ஏப்ரல் 27, 2020 08:03

சீர்காழி: வைத்தீஸ்வரன்கோவிலில் மனநல ஆலோசகர் லாவண்யா தூய்மை பணியாளர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கினார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடே நடுங்கி ஊரடங்கி இருக்கும்போதும் நாடு முழுவதும் தூய்மை பணியாளர்கள் கொரோனா வைரசை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தூய்மை பணியாளர்களுக்கு தற்போது பணிசுமை அதிகரித்துள்ளது. நேரம் காலம் பார்க்காமல் தூய்மைப்பணிகள் கிருமிநாசினி பிளச்சிங் பவுடர் தெளிப்பது போன்ற பணிகளில் ஓய்வின்றி தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

வீடுகளில் தேங்கும் குப்பைகள், கழிவுகளை தினமும் அப்புறப்படுத்துவதால் எங்கே தங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தால் ஒவ்வொரு நொடியும் கடுமையான மன அழுத்தத்துடன் பணி செய்து வருகின்றனர். பொதுவாக தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகம் மூலம் உடல் மருத்துவ பரிசோதனை மட்டும் தான் அடிக்கடி நடத்தப்படுகின்றன. அவர்களுக்கு மனரீதியான ஆலோசனை வழங்கப்படுவதில்லை.

இந்தநிலையில் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் புது முயற்சியாக தூய்மை பணியாளர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க பேரூராட்சி செயல் அலுவலர் குகன் ஏற்பாடு செய்தார். அதன்படி வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு மன அழுத்தத்தை போக்க நாகை அரசு மருத்துவமனை மனநல ஆலோசகர் லாவண்யா உளவியல் ஆலோசனை வழங்கினார்.

அப்போது தூய்மை பணியாளர்களின் சேவை இந்த இக்கட்டான சூழ்நிலையில் எவ்வளவு உயர்வானது என பாராட்டி அவர்கள் மனதில் தங்களின் பணி குறித்த தாழ்வு மனப்பான்மை களையப்பட்டது. தனிநபர் பாதுகாப்பு கருவிகள் பயன்படுத்துவதன் அவசியம் கைகழுவும் நடைமுறைகள் குறித்து எடுத்து கூறப்பட்டது. நோய் தொற்று குறித்த தேவையற்ற அச்சத்தை நீக்கி முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை பேரூராட்சி செயல் அலுவலர் பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறுகையில்; தூய்மை பணியாளர்களின் மன அழுத்தத்தை புரிந்து கொண்டு ஆலோசனை நடத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தேன். குழு மற்றும் தனிநபர் ஆலோசனை அளிக்கப்பட்ட பிறகு மன அழுத்தம் நீங்கி புத்துணர்வுடன் பணி புரிகின்றனர் என்றார். செயல் அலுவலரின் இந்த நடவடிக்கைக்கு தூய்மை பணியாளர்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

தலைப்புச்செய்திகள்