Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா எதிரொலியால் போக்குவரத்துக்கு தடை: தமிழகம்-ஆந்திரா இடையே 3 அடி உயரம் கட்டப்பட்ட சுவர்

ஏப்ரல் 27, 2020 11:26

வேலூர்: தமிழக-ஆந்திர எல்லையின் குறுக்கே  3 அடி உயரத்தில் தடுப்புச்சுவர் எழுப்பி இருமாநில போக்குவரத்தும் அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் சுற்றிச் செல்வதால், காய்கறி சப்ளை பாதிக்கப்படும் அபாயம் ஏற்படுவதுடன் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதி ஆந்திர மாநிலத்தையொட்டி உள்ளது. குடியாத்தத்தில் இருந்து ஆந்திர மாநிலம் பலமநேர் செல்லும் சாலையில் 18 கிலோ மீட்டர் தூரத்தில் சைனகுண்டா சோதனைச்சாவடி உள்ளது. இந்த சாலை மார்க்கமாக, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்து குடியாத்தம் வழியாக, தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு தேவையான காய்கறிகள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள், சிமெண்டு, கிரானைட் கற்கள் உள்பட பல்வேறு முக்கியமான பொருட்கள் கனரக வாகனங்கள் மூலமாக வந்து செல்கின்றன.

கொரோனாவையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் சைனகுண்டா சோதனைச் சாவடியில் வனத்துறை, காவல் துறை, வருவாய்த்துறையினரும், மருத்துவக் குழுவினரும் இணைந்து 24 மணி நேர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காய்கறிகள், பால், மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை ஏற்றி வரும் லாரிகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. வாகனச் சோதனைக்குப் பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், பலமநேர் பகுதியில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பால், அந்த மாவட்டத்தில் ஒருவர் இறந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆந்திராவிலிருந்து வரும் வாகனங்கள் தமிழகத்தில் நுழைய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதையடுத்து புது யோசனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சைனகுண்டா சோதனைச் சாவடியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஆந்திர மாநிலம் செல்லும் சாலையும், பங்காருபாளையம் செல்லும் சாலையும் இணையும் முன்பே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

பொன்னை, சைனகுண்டா ஆகிய 2 தமிழக-ஆந்திர எல்லை சோதனைச்சாவடி சாலைகள் நேற்று முழுவதுமாக மூடும் வகையில் சாலை நீளத்திற்கு 3 அடி உயரம் வரை சுவர் எழுப்பி சாலைகள் மூடப்பட்டுள்ளது. 2 சோதனைச்சாவடிகள் மூடப்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் வருகை பாதிக்காத வகையில் ஆந்திராவில் இருந்து பொன்னை வழியாக வரும் வாகனங்கள் கிருஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடி வழியாகவும், சைனகுண்டா வழியாக வரும் வாகனங்கள் பரதராமி சோதனைச்சாவடி வழியாகவும் செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இவ்வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். என்றும் வெளிமாநிலத்தில் இருந்து வருவோரை கண்காணிக்கவே இந்த எல்லை சாலை மூடல் என்றும், மற்ற சோதனைச்சாவடிகளில் வரும் வாகன ஓட்டிகளை பரிசோதிக்க அந்தந்த மாநில எல்லை சோதனைச்சாவடிகளில் சிறப்பு பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். வாகனங்கள் சுற்றி வருவதால், தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்