Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 2021 வரை நிறுத்தம்

ஏப்ரல் 27, 2020 11:40

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 2021ம் ஆண்டு ஜூலை வரையிலும், ஈட்டிய விடுப்பு ஒராண்டுக்கும் நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, அடுத்த ஆண்டு ஜூலை 1 வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. 2020 ஜன.,1 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வும் நிறுத்திவைக்கப்படுகிறது. இருப்பினும், அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்படும். நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு பிற்காலத்தில் வழங்கப்படாது.

இந்த உத்தரவானது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு உதவிபெறும் நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள், யுஜிசி மற்றும் அகில இந்தியா தொழில்நுட்ப கல்வி நிறுவன ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு டிப்ளமோ அமைப்புகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநர்கள், நூலகர்கள், வருவாய்த்துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், மதிய உணவு திட்ட ஊழியர்கள், குழந்தை நலத்துறை அமைப்பு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், கிராம பஞ்சாயத்தில் பணிபுரியும் பஞ்சாயத்து செயலாளர்கள், உதவியாளர்கள் ஆகியோருக்கு பொருந்தும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பிறப்பித்த மற்றொரு உத்தரவில் கூறியுள்ளதாவது: ஆண்டுதோறும், அரசு ஊழியர்கள் எடுக்காத விடுமுறையை எழுதிக்கொடுத்து அதற்கு சம்பளம் பெறுவார்கள். இந்நிலையில், கொரோனாவால் தமிழக அரசு மற்றும் ஆசிரியர்களுக்கு அடுத்த ஒராண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்திவைக்கப்படுகிறது. மாநில நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், பல்கலைகழகங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும். ஈட்டிய விடுப்பு சம்பளத்திற்கு விண்ணப்பித்திருந்தாலும், அதுவும் நிறுத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 15 நாள், 2 ஆண்டுகளுக்கு 30நாட்கள் ஈட்டிய விடுப்பு வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும், அரசு ஊழியர்கள் விடுமுறையை எழுதி கொடுத்து அதற்கான சம்பளத்தை பெறுவார்கள்.
 

தலைப்புச்செய்திகள்