Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எலக்ட்ரீஷியன் உள்பட 3 பேருக்கு கொரோனா!: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பரபரப்பு

ஏப்ரல் 27, 2020 12:33

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கோயிலில் பணியாற்றும் தீயணைப்பு படை வீரர் ஒருவர் உள்பட அக்கோயில் ஊழியர்கள் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வாரம் மீனாட்சி அம்மன் கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர் ஒருவரின் தாயார் கொரோனாவைரஸ் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில வாரங்களுக்கு முன் அந்த பட்டர் வெளிநாடு சென்று வந்ததாகவும், அதன்மூலம் அவரது அம்மாவுக்கு தொற்று பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் ஒட்டு மொத்தமாக மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, 2 கி.மீ., பகுதிக்கு கோயில் பகுதி சீல் வைக்கப்பட்டது.

கோயில் முழுமையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல, பட்டர் குடும்பத்திற்கு அருகில் வசிக்கும் மற்ற எல்லா வீடுகளுக்கும் தனித்தனியாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், அக்கோயிலில் பணியாற்றிய எல்லா ஊழியர்களுக்குமே கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை முடிவில், கோயிலில் பணிபுரியும் எலக்ட்ரீஷியன், கம்ப்யூட்டர் உதவியாளர், தீயணைப்பு படை வீரர் என 3 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

கோயிலில் அடுத்தடுத்து ஊழியர்கள் பாதிப்பதால், மதுரை மேல சித்திரை வீதியில் உள்ள தீயணைப்பு நிலையம் உடனடியாக மூடப்பட்டது. அங்குள்ள வீரர்கள் அனைவருக்கும் மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர். ஏற்கனவே மதுரை தெற்குவாசல் காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமை காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக மதுரை மாநகரில் ஏற்கனவே தெற்குவாசல் காவல்நிலையம் மூடப்பட்டுள்ளது. 

மதுரை மாவட்டத்தில் மட்டும் கடந்த 4 நாட்களில் போலீசார் 2 பேருக்கும், தீயணைப்பு வீரர் ஒருவர், 3 ஒப்பந்த சுகாதார பணியாளர்கள், ஒரு அரசு ஆஸ்பத்திரி நர்ஸ் என தடுப்பு பணிகளில் ஈடுபட்டோருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மதுரையில் சமூக தொற்றுக்கான நிலைக்கு சென்றுவிட்டதா? என்று பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இருந்தாலும், கொரோனாவை கட்டுப்படுத்திவிடலாம் என்ற முனைப்பில் சுகாதாரத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், ஊழியர்கள் நம்பிக்கையுடன் பணிபுரிந்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்