Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை சலூன் கடைக்காரருக்கு கொரோனா: வீடு வீடாக போய் முடி வெட்டியதால் புது சிக்கல்

ஏப்ரல் 28, 2020 03:17

சென்னை: சென்னையில் சலூன் கடைக்காரர் வீடு வீடாக போய் முடி வெட்டிய நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஊரடங்கு நேரத்தில் எல்லா கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பலதொழில்கள் பாதிக்கப்பட்டதால் வருமானம் இன்றி ஏராளமானோர் தவித்து வருகின்றனர். அந்த வகையில் சலூன் கடைகளும் ஒன்று. இவர்களுக்கு வருமானம் இழப்பு ஒரு பக்கம் என்றாலும் பொதுமக்கள் கட்டிங், ஷேவிங் இல்லாமல் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். விஜயகாந்த்துக்கு பிரேமலதா ஷேவ் செய்து, டை அடித்து விட்டதுபோல, முடிந்தவரை சிலர் வீடுகளுக்குள்ளேயே இதை செய்து கொள்கின்றனர். அதற்கு குடும்ப உறுப்பினர்களும் உதவுகின்றனர். ஆனால் ஷேவ் , கட்டிங் செய்ய தெரியாதவர்கள் நிலை படுதிண்டாட்டமானது.

சலூன் கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்படாத நிலையில் சென்னையை சேர்ந்த சலூன் கடைக்காரர் ஒருவர் கோயம்பேடு பகுதியில் கடையை திறந்து பொதுமக்களுக்கு முடி வெட்ட ஆரம்பித்துவிட்டார். தற்போது இந்த சலூன் கடைக்காரரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கடை மார்க்கெட்டில் இருக்கிறது. அதனால் மக்களுக்கு பீதி கிளம்பி உள்ளது.

இவருக்கு 4 நாட்களுக்கு முன் தொற்று நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இவர் யார் யாருக்கெல்லாம் முடி வெட்டினார்? என்று தெரியவில்லை. அதனால் கடைக்கு வந்து முடி வெட்டிய வாடிக்கையாளர்கள் எல்லாரையும் கண்டு பிடிக்கப்பட்டு அவர்களுக்கும் கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. அவரது கடையில் சுமார் 15க்கும் மேற்பட்ட நபர்கள் முடிவெட்ட, சவரம் செய்ய வந்து போனதாக கூறப்படுகிறது.

கடைக்கு வரும் கஸ்டமர்கள் இல்லாமல், அச்சத்தால் வெளியே வர வீட்டுக்குள் முடங்கியிருந்த நபர்களுக்கும் வீடுகளுக்கே சென்று கட்டிங் செய்துவிட்டு வந்திருக்கிறார். நாள்தோறும் இப்படி பத்து பேர்களுக்கு வீடுகளுக்கே 14 நாட்களாக சென்று இவர் முடிவெட்டி உள்ளார். அதனால் அவர்களையும் தனிமைப்படுத்த போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அந்த வீடுகளில் வேறு யார் யார் இருந்தார்களோ, அவர்களையும் தனிமைப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார், சலூன் கடைக்காரர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறக்க வேண்டும் என அரசு அறிவுறுத்திய நிலையில், சலூன் கடையை இவர் திறந்து வைத்தது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே, கோயம்பேடு மார்க்கெட்டில் 2 வியாபாரிகளுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் மூலம் அப்பகுதியில் இருக்கும் 4 பேருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டு, அவர்களது ரத்த மாதிரிகளும் டெஸ்ட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இப்போது இந்த கோயம்பேடு சம்பவம் சென்னையை மேலும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது.

தலைப்புச்செய்திகள்