Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2 போலீசாருக்கு கொரோனா தொற்று: நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் மூடல்!

ஏப்ரல் 28, 2020 03:19

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் 2 போலீஸ்காரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. 

சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் காவல்துறையினர் இரவு பகலாக 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணியில் ஈடுபட்டு வந்தவர்களில் இதுவரை 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் தற்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், சென்னையின் இதயப்பகுதியான நுங்கம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் தலைமை காவலர் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நுங்கம்பாக்கம் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

யாருக்கும் காவல் நிலையம் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. அங்கு கிருமி நாசினி அடித்து தூய்மை படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டார்கள். இந்நிலையில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மற்ற போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே மதுரையில் போலீசார் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியதால் காவல் நிலையம் ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டது.இப்போது சென்னையிலும் போலீசாருக்கு கொரோனா பரவி காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சென்னையில் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்