Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி ஏ.டி.எம். மையங்களில் கிருமி நாசினி வைக்காவிட்டால் நடவடிக்கை

ஏப்ரல் 29, 2020 08:26

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் வங்கி ஏ.டி.எம். மையங்களில் கிருமி நாசினி வைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது; திருச்சி மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம்.மையங்களில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக கையில் தடவும் கிருமி நாசினி (ஹேண்ட் வாஷ்) வைத்திட வேண்டும். பொதுமக்கள் வசதிக்காக வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள் மூலம் பணபரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பணம் எடுப்பதற்கும் பணம் செலுத்துவதற்கும் ஏ.டி.எம். மையங்களை அதிகஅளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும் முன்பாக கிருமி நாசினியை கைகளில் தடவிக்கொள்ள வேண்டும். பரிவர்த்தனை முடிந்த பின்னரும் கிருமி நாசினியை கைகளில் தடவிக் கொள்ள வேண்டும். ஏ.டி.எம்.களில் காவலர்கள் இருந்தால் அவர்களிடம் கிருமி நாசினி வழங்கி பொதுமக்கள் பணம் எடுக்கும் போதும் பணம் எடுத்த பின்பும் உபயோகப்படுத்திட அறிவுறுத்த வேண்டும். ஏ.டி.எம். களில் கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளதா என்பதை முன்னோடி வங்கி மேலாளர் கண்காணிக்க வேண்டும். இந்த நடைமுறைகளைபின்பற்றாத வங்கிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் ஊரக மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் வைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம்.மையங்களில் கிருமி நாசினி வைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணித்து மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்