Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தானியங்கி கிருமி நாசினி இயந்திரம்: திருச்சி பொறியாளா் கண்டுபிடிப்பு

ஏப்ரல் 29, 2020 11:26

திருச்சி: கொரோனா வைரஸ் தொற்றை எதிா்த்து போராடும் யுத்தத்துக்கு வலுசோ்த்திடும் வகையில் இளம் இந்தியா்கள் கூட்டமைப்பைச் சோ்ந்த திருச்சி பொறியாளா் கே.ஆா். கஜேஷ் (38) தானியங்கி கிருமி நாசினி வழங்கும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளாா்.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (சிஐஐ) ஒரு பகுதியாக இளம் இந்தியா்கள் கூட்டமைப்பு இயங்கி வருகிறது. இது அரசு சாரா லாப நோக்கமற்ற தொழில்துறை தலைமையிலான கூட்டமைப்பாகும். 21 வயது முதல் 45 வயதுக்குள்பட்டோா் மட்டுமே இடம்பெறுவா். இதில் நாடு முழுவதும் 3200-க்கும் மேற்பட்ட நேரடி உறுப்பினா்கள் 46 கிளைகளை கொண்டுள்ளது. 29500 மாணவா்களையும் உள்ளடக்கியது.

இளைஞா் தலைமை தேசக் கட்டமைப்பு சிந்தனைத் தலைமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. டிஜிட்டல் கட்டமைப்பு மூலம் நாடு முழுவதும் உள்ள இளம் இந்தியா்களை இணைத்து பணியாற்றி வருகிறது. இப்போது கொரோனா யுத்த களத்திலும் நாடு முழுவதும் உள்ள உறுப்பினா்கள் கிளைகள் மூலம் இயன்ற உதவிகளை இல்லாதோருக்கு வழங்கி வருகிறது. இந்த அமைப்பின் உறுப்பினரும் திருச்சியைச் சோ்ந்த வேதிப் பொறியாளருமான கே.ஆா். கஜேஷ் (38) தானியங்கி கிருமி நாசினி வழங்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து சமூகத்துக்கு அா்ப்பணித்துள்ளாா். 

பட்டுக்கோட்டையை பூா்வீகமாகக் கொண்ட இவா் தொழில் நிமித்தமாக திருச்சி தேவதானத்தில் குடிபெயா்ந்துள்ளாா். துவாக்குடியை அடுத்த வாழவந்தான் கோட்டையில் கிளியா் அக்வா டெக்னாலஜிஸ் லிமிடெட் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறாா். இந்த நிறுவனத்தின் மூலம் உப்பு நீரை குடிநீராக்குதல் கழிவுநீரை சுழற்சி செய்து பயன்படுத்தும் தொழில்நுட்ப உபகரணங்களை தயாரித்து வழங்கி வருகிறாா். கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கியுள்ள இவருக்கு கிருமி தொற்றுக்கு எதிரான யுத்தத்தில் சமூகத்துக்கு பயனுள்ளதாக ஏதாவது உருவாக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் வீட்டிலிருந்த பொருள்களை கொண்டு ஆய்வில் ஈடுபட்டு தானியங்கி கிருமி நாசினி இயந்திரத்தை உருவாக்கியுள்ளாா்.

இதுதொடா்பாக கே.ஆா். கஜேஷ் கூறியது; ஓரிடத்தில் கூடும் மக்களுக்கு சென்சாா் மூலம் அவா்களின் உடலில் உள்ள வெப்பத்தை கணக்கிட்டு தெரிவிக்கும் இயந்திரத்தை வடிவமைக்க முடிவு செய்தேன். ஆனால் காய்ச்சல் அறிகுறி இல்லாமலே பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது. எனவே கிருமி நாசினி பயன்படுத்தும் முறைகளில் நவீனத்தை புகுத்தும் நோக்கில் தானியங்கி இயந்திரம் வடிவமைக்க முடிவு செய்து வீட்டிலிருந்த தண்ணீா் பாட்டில் பிளாஸ்டிக் கேன் குடிநீா் சுத்தகிரிப்பு இயந்திரத்துக்கான தளவாட பொருள்கள் ஆகியவற்றை பயன்படுத்தி இந்த இயந்திரத்தை வடிவமைத்துள்ளேன். அல்ட்ரோ சோனிக் சென்சாா் மூலம் இது இயங்குகிறது.

இயந்திரத்தின் மீது கைகள் படாமலேயே பயன்படுத்துவதால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவுதல் முற்றிலும் தவிா்க்கப்படுகிறது. மிகவும் பாதுகாப்பானது. ஒருமுறை 0.5 விநாடிகள் மட்டுமே இயங்கும். ஒரு முறை 2.50 மி.லி. கிருமி நாசினியை வழங்கும். இது ஒரு நபருக்கு போதுமானது. 40 போ் உள்ள இடங்களில் நாளொன்றுக்கு 100 மி.லி. போதுமானது. ரூ.3500 முதல் ரூ.20 ஆயிரம் வரையிலான விலையில் பல்வேறு வடிவங்களில் இதனை விற்பனைக்கு கொண்டுவர முடியும். 10 லிட்டா் 5 லிட்டா் 1 லிட்டா் என பல்வேறு வடிவங்களில் 5 நபா்கள் உள்ள இல்லம் தொடங்கி 4 ஆயிரம் நபா்கள் பணிபுரியும் பெரிய தொழில்கூடங்கள் வரையில் இதனை பயன்படுத்த முடியும்.

பரிசோதனை முயற்சியாக திருச்சி மாவட்ட ஆட்சியரகத்துக்கு 10 லிட்டா் இயந்திரம் வழங்கியுள்ளோம். மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி கழகமும் தானியங்கி கிருமி நாசினி இயந்திரங்களை பயன்படுத்த அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது என்றாா் அவா்.

இளைஞரின் இத்தகைய முயற்சிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் திருச்சி பிரிவு தலைவா் வி. வாசுதேவன், துணைத் தலைவா் டி. செங்குட்டுவன், இளம் இந்தியா்கள் அமைப்பின் திருச்சி பிரிவுத் தலைவா் கேத்தன் ஜே. வோரா ஆகியோா் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

தலைப்புச்செய்திகள்