Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரசித்தி பெற்ற ஸ்ரீமான் தாத்தாச்சாரியார் மாம்பழக் கடை: ஊரடங்கால் களையிழந்த வியாபாரம்

ஏப்ரல் 29, 2020 12:33

திருச்சி: தமிழகத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ஸ்ரீமான் தாத்தாச்சாரியார் மாம்பழக் கடை ஊரடங்கு உத்தரவு காரணமாக காய்கறிகள் மற்றும் பழ வகைகள் மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு களையிழந்து காணப்படுகிறது.

இதுகுறித்து ஸ்ரீமான் தாத்தாச்சாரியார் மாம்பழக் கடை மேலாளர் சங்கர் தெரிவித்ததாவது:

திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையில் இயங்கும் பிரசித்திபெற்ற, மிகவும் பழமைவாய்ந்த  ஸ்ரீமான் தாத்தாச்சாரியார் மாம்பழக் கடையாகும். 70 ஆண்டுகளுக்கும் மேல் இந்தக் கடை செயல்படுவதால் இப்பகுதிக்கு ‘மாம்பழச்சாலை’ என்று பெயர்பெற்றது. அந்தளவுக்கு புகழ்பெற்றதாகும். இதற்கு காரணம் இங்கு விற்கும் மாம்பழங்கள் தான். நாங்களே எங்கள் தோட்டத்தில் பயிரிட்டு பல்வேறு வகையான மாம்பழங்களை விற்பனை செய்து வருகிறோம்.

குறிப்பாக, இமாம்பசந்து, பங்கனப்பள்ளி, மல்கோவா, செந்துாரா, காசாலட்டு, அல்போன்சா, கல்லாமணி, நீலம், மாதுரி, ஆமின், பெங்களுரா உள்ளிட்ட பல்வேறு மாம்பழங்களை ஏப்ரல், மே, ஜூன், ஜூலை வரை சீசன் காலங்களில் மொத்தமாகவும், சில்லரையாகவும் நேரடியாக விற்பனை செய்வதால் விலையும் அதிகம் இருக்காது. எங்களுக்கு கட்டுப்படியான விலைக்கே விற்கிறோம்.

தாத்தாச்சாரியார் தோட்ட மாம்பழம் தரமாகவும், அதிக சுவையுடன் இருப்பதால் திருச்சி மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி அண்டை மாவட்ட மக்களும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக வி.ஐ.பி.க்கள் அதிகமானோர் இந்த மாம்பழங்களை வாங்கிச் செல்வது வழக்கம். தமிழகம் முழுவதும் உள்ள மாம்பழ வியாபாரிகள் ஆர்டரின் பேரில் பெட்டி, பெட்டியாய் மொத்தமாக வாங்கிச் சென்று அவரவர் பகுதிகளில் சில்லரையாக எங்கள் மாம்பழங்களை விற்பனை செய்கின்றனர். குறிப்பாக பெங்களூருவுக்கு அதிகம் எங்கள் மாம்பழங்கள் கொண்டு செல்லப்படும். டிராவல் ஏஜன்சிகள் மூலம் சிங்கப்பூர், மலேசியா, இலங்கைக்கு எங்கள் மாம்பழங்கள் பார்சல் செய்யப்படுவது வழக்கம்.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கடை திறக்கப்படுகிறது. மாம்பழங்களின் தரம், வகைக்கு ஏற்ப ஒரு கிலோ மாம்பழம் ரூ.50 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து இயங்காத நிலையில் அனைத்து இடங்களுக்கும் மாம்பழங்கள் அனுப்ப முடியாத நிலை உள்ளது. 100 பெட்டிகளுக்கு மேல் ஆர்டர் வந்தால் மட்டுமே தனிப்பட்ட முறையில் வேன்கள் மூலம் சம்மந்தப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கிறோம். இதற்கு போக்குவரத்து செலவு அதிகம் இருப்பதால் ஆர்டர்களும் அதிகளவில் குறைந்துள்ளது. இதனால் மாம்பழ  விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை கடைபிடித்து தான் நாள்தோறும் மாம்பழம் விற்பனை செய்கிறோம். இருப்பினும் ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் தாத்தாச்சாரியார் மாம்பழக் கடையில் அதிகம் விற்பனையின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்