Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தடுப்பு பரிசோதனையில் சாதனை: நாராயணசாமி பெருமிதம்

ஏப்ரல் 29, 2020 12:41

புதுச்சேரி: “கொரோனா தடுப்பு பரிசோதனைகள் மேற்கொண்டதில் டெல்லிக்கு அடுத்தபடியாக புதுச்சேரி மாநிலம் 2 வது இடத்தில் உள்ளது,” என்று முதல்வர் நாராயணசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்ததாவது:

கொரோனா தடுப்பு பரிசோதனைகள் மேற்கொண்டதில் இந்திய அளவில் டெல்லிக்கு அடுத்தபடியாக, புதுச்சேரி மாநிலம் 2 வது இடத்தில் உள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டு வீடு, வீடாகச் சென்று சுமார் 10 லட்சக்கும் மேற்பட்டோரை பரிசோதனை செய்துள்ளனர். அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது.

மேலும் ஏனாம் பிராந்தியத்திலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு வேலைக்காகச் சென்று திரும்பிய 8 பேர் ஏனாம் எல்லை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். விதிமுறைகள் இருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் அவர்களை அனுமதிக்காதது கொடுமையானது. யாருடைய உத்தரவின் பேரில் அவர்கள் செய்தார்கள் என்பது தெரியும். அதைப்பற்றி விளக்கமளிக்க விரும்பவில்லை.

அவர்கள் திரும்பி வர நானும், சுகாதாரத்துறை அமைச்சரும் முயற்சித்ததின் காரணமாக, தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின் பேரில், அவர்கள் ஏனாம் வருவதற்கு உத்தரவிட்டுள்ளோம். மத்திய பிரதேசத்தில் சிக்கியுள்ள காரைக்கால் மாணவர்களும், வாரணசியில் சிக்கியுள்ள புதுச்சேரியைச் சேர்ந்த 22 சுற்றுலாப் பயணிகளும் மே 3க்குப் பிறகு ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் அந்தந்த மாநில முதல்வர்களுடன் பேசுவேன். இதே போல, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பிச் செல்வதற்கும், வருவதற்கும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு கடிதம் எழுத முடிவெடுத்துள்ளோம்.

அரசியல் கட்சிகள், பொதுமக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு, புதுச்சேரி கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிக சிறைச்சாலை அமைக்கும் முடிவு நிறுத்தப்பட்டுள்ளது. வேறிடத்தை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளோம். புதுச்சேரியில் காலை நேரங்களில் மக்கள் அதிகளவில் உலவுவது தொடர்கிறது. மக்கள் நடமாட்டத்தை தவிர்க்க அனைத்துத் துறைகளும், தங்களுடைய பணியாளர்கள் பிற்பகல் சமயத்தில் வீட்டுக்குச் செல்வதை தவிர்க்க உத்தரவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், மிகப் பெரிய சவாலை சந்தித்து வருகிறோம். வெளி மாநில மக்களை தடுத்து வருகிறோம். அரசு துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்றி கொரோனா தொற்று பரவாமல் செயலாற்றி வருகிறது. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வேண்டும். மக்கள் தேவையின்றி வெளியில் சுற்றாமல், தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் வாங்க சமூக இடைவெளி கடைபிடித்து, முகக்கவசம் அணிந்தபடி செல்ல வேண்டும்.

புதுச்சேரியில் படிப்படியாக தொழிற்சாலைகளைத் திறக்கும் வேலைகளை செய்து வருகிறோம். அதேபோல, கடைகளும் ஓரிரு நாட்களில் திறக்கப்படும். கொரோனா ஊரடங்கால் வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் கூட, மக்களின் உயிரைப் பாதுகாப்பது அவசியம். எனவே, புதுச்சேரி மக்கள் மே 3ம் தேதி வரை அமைதி காக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்