Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில், சென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது: முதல்வர்

ஏப்ரல் 29, 2020 12:53

சென்னை: தமிழகத்தில், சென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது என முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் நடந்த ஆலோசனையின் போது முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது: சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் கொரோனா கட்டுக்குள் உள்ளது. பேரூராட்சி, நகராட்சியில் நோய் கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும், மாநகராட்சியில் கட்டுக்குள் வரவில்லை. மாநகர பகுதி, மக்கள் நெருக்கத்தால், சென்னையில் கொரோனா பரவல் அதிகம் உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. கொரோனா காலத்தில் பல நாடுகளில் உணவுக்காக பல போராட்டங்கள் நடந்தன. ஆனால், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அம்மா உணவக திட்டத்தை பலரும் பாராட்டுகின்றனர். இங்கு தரமான உணவு வழங்கப்படுகிறது. அம்மா உணவகத்தில் தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பதை அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். தமிழகத்தில் அத்யாவசிய பொருட்களுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை.

ரேசன் கடைகளில் பொருட்கள் வழங்கும் போது சமூக விலகலை பின்பற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல இடங்களில் பின்பற்றப்படுவதில்லை. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறி வாங்க செல்லும் போது, மக்கள் சமூக விலகலை கடைபிடிப்பதில்லை. மார்கெட்களிலும் சமூக விலகலை பின்பற்ற கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, தன்னார்வலர்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

கிருமி நாசினியை முறையாக தெளித்தால், பரவலை கட்டுப்படுத்த முடியும். அதனை செய்ய வேண்டும். நகர்ப்பகுதிகளில் உள்ள கழிப்பறைகளை தினமும் 3 முறை சுத்தப்படுத்த வேண்டும். அங்கு தொற்று ஏற்படாமல், சுத்தப்படுத்த வேண்டும். ரேசன் கடைகளில், பொருட்களை வழங்கும் போது டோக்கன் வழங்கப்படும் போது, எத்தனை மணிக்கு வர வேண்டும் என சொல்லி அதனை வழங்க வேண்டும்.

விவசாயிகள் கொண்டு செல்லும் வாகனத்தை பறிமுதல் செய்யக்கூடாது. அவர்கள், பொருட்களை மார்க்கெட்களுக்கு கொண்டு செல்ல உதவ வேண்டும். காய்கறி, பழங்களை குளிர்பதன கிடங்குகளை பயன்படுத்த உதவ வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில் பாதிக்காதவாறு இருக்க கலெக்டர்கள் பார்த்து கொள்ள வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தில் சமூக விலகல் பின்பற்ற வேண்டும். மாஸ்க் அணிய வைக்க வேண்டும். இந்த திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களை தவிர்க்க வேண்டும். அவர்களது குடும்பத்தில் தகுதியான நபர்களை பணியில் ஈடுபடுத்தலாம். அதிக ஆட்கள் இருந்தால் 2 அல்லது 3ஆக பிரித்து பணி வழங்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து யாரும் வெளியே வரக்கூடாது. உள்ளே செல்லவும் கூடாது. இதை அதிகாரிகள் பார்த்து கொள்ள வேண்டும். அங்கு இரண்டு முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும். முழுமையாக கண்காணிக்க வேண்டும் சுகாதார பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.

பிற மாநிலங்களில் இருந்து வரும் எல்லைகளை கண்காணிக்க வேண்டும்.நோய் தொற்று வந்தவர்கள் வந்தால் நோய் பரவிடும். இதனால், போலீசார் கவனமுடன் இருக்க வேண்டும். இங்கு வருவதற்கான அனுமதி சீட்டு வைத்திருப்பவர்களை மட்டும் சோதனை செய்து அனுமதிக்க வேண்டும்.

கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் சில தொழில்களுக்கு தளர்வு வழங்குவது பற்றி அரசு முடிவெடுக்கும். கொரோனா குறைந்த பச்சைப்பகுதிகளில் தொழில் துவங்க அரசு தரும் அறிவுரைகளை ஏற்று ஆட்சியர் செயல்படலாம்.எண்ணெய், ஜவ்வரிசி, முந்திரி உள்ளிட்ட விவசாயம் சார்ந்த தொழில்கள் நடைபெற ஆட்சியர்கள் உதவ வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்