Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினால் வீடு தேடி வரும் கள்ளச்சாராயம்: 2 பேர் கைது

ஏப்ரல் 30, 2020 07:56

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கூகுள் பேயில் பணம் செலுத்தினால் கள்ளச்சாராயத்தை டோர் டெலிவரி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். எசனை காட்டு மாரியம்மன் கோவில் பகுதியில் சாலையில் வந்துக்கொண்டிருந்த சொகுசு காரை வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது அந்த காருக்குள் கேனில் 6 லிட்டர்
சாராயம் இருந்தது தெரிய வந்தது. அதனை கைப்பற்றி காரில் இருந்த இருவரிடம் போலீசார் விசாரித்தனர்.

இதில் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா மங்கள மேட்டை சேர்ந்த ரவிராஜா (38) பெரம்பலூர் தாலுகா செங்குணத்தை சேர்ந்த முத்தரசன் (30) என்பதும் தெரிய வந்தது. தொடர் விசாரணையில் சேலம் மாவட்டம் ஆத்தூரிலிருந்து சாராயம் வாங்கி கொண்டு வந்து ஒரு லிட்டர் சாராயம் ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை செய்து வருவதும் பணத்தை கூகுள் பேயில் முகவரியை பதிவு செய்து சாராயம் தேவையான அளவிற்கான தொகையை செலுத்த வேண்டும்.

அதனை வைத்து பணம் செலுத்தியவர்களுக்கு சாராயத்தை வீடு தேடி சென்று அதாவது டோர் டெலிவரி செய்து வருவதும் இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோருக்கு சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் போலீசார் தடுக்காமல் இருக்க காரில் வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வலம் வந்துள்ளனர்.

இதில் கைதான ரவிராஜா பெரம்பலூர் நான்குரோடு பகுதியில் லாரி சர்வீஸ் தொழிலும், முத்தரசன் கூலி வேலையும் பார்த்து வருகின்றனர். இது குறித்து மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிந்து சட்ட விரோதாமாக சாராயம் விற்பனையில் ஈடுபட்ட ரவிராஜா, முத்தரசன் ஆகியோரை கைது செய்ததோடு காரையும் பறிமுதல் செய்தனர்.

தலைப்புச்செய்திகள்