Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேங்கி கிடக்கும் ரூ.50 லட்சத்துக்கும் மேற்பட்ட தஞ்சை ஓவியங்கள்

ஏப்ரல் 30, 2020 08:24

தஞ்சை: ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் ரூ.50 லட்சத்துக்கும் மேற்பட்ட தஞ்சை ஓவியங்கள் தேங்கி கிடக்கிறது.

ஓவியங்கள் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது தஞ்சாவூர் ஓவியங்கள் தான். பெயிண்டால் வரையப்பட்டு அதன் மேல் தங்க இழை மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டோன்கள் (கற்கள்) பதிக்கப்படுகிறது. இதுபோன்ற ஓவியங்கள் வேறு எங்கும் தயார் செய்யப்படாததால் தஞ்சாவூர் ஓவியங்களுக்கு தனிச்சிறப்பு உண்டு. பலா மரத்தினால் ஆன பலகை அல்லது பிளைவுட்டில் இந்த ஓவியங்கள் செய்யப்படுகிறது. இந்த பலகையின் மீது பசை தடவி அதில் காட்டன் துணி ஒட்டப்பட்டு அதில் பெயிண்டால் ஓவியங்கள் வரையப்படுகின்றன. பின்னர் அந்த ஓவியங்கள் மீது தங்க இழை மற்றும் ஸ்டோன்கள் பதிக்கப்பட்டு பிரேம் செய்யப்படுகிறது.

இந்த வகை ஓவியங்கள் சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்க போன்ற வெளிநாடுகளுக்கும் இந்தியாவில் ஆந்திரா, கோவா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்டோர் இந்த ஓவியங்களை வரைந்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கூட்டுறவு சொசைட்டி மூலமும் பூம்புகார் மூலமும் விற்பனை செய்து வருகிறார்கள். இதை தவிர்த்து பலர் நேரடியாகவும் ஓவியங்கள் வரைந்து வெளிநாடுகள் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் ஓவியங்கள் விற்பனை நடைபெறவில்லை. மேலும் இந்த ஓவியங்கள் வரைவதற்கு தேவையான ஜெய்ப்பூர் ஸ்டோன்கள் மற்றும் பெயிண்டிங் போன்றவைகளை வெளி மாநிலங்களில் இருந்து வாங்கி வந்து வரைகிறார்கள். தற்போது போக்குவரத்து இயங்காததாலும் வெளிமாநிலங்களில் இருந்து மூலப்பொருட்கள் வராததாலும் ஓவியம் வரையும் கலைஞர்கள் இந்த தொழிலில் ஈடுபட முடியாமல் முடங்கிப்போய் உள்ளனர். இந்த ஓவியங்கள் கிருஷ்ணன் பெருமாள் அஷ்டலட்சுமி உள்ளிட்ட பல்வேறு தெய்வங்கள் வடிவில் தயாரிக்கப்பட்டு வந்தது. 

தற்போது யார் உருவம் வேண்டுமானாலும் வரையப்படுகிறது. தற்போது அவ்வாறு வரையப்பட்ட பல ஓவியங்கள் வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் தேங்கிக்கிடக்கிறது. ஒவ்வொரு ஓவியர்களிடமும் அதிபட்சமாக ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான ஓவியங்கள் தேங்கி கிடக்கின்றன. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் ரூ.50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓவியங்கள் தேங்கி கிடக்கின்றன. இந்த ஓவியங்கள் குறிப்பாக ஆந்திராஇ கோவா போன்ற மாநிலங்களுக்கு அனுப்புவதற்காக வரையப்பட்டவை ஆகும்.

இது குறித்து தஞ்சையை சேர்ந்த ஓவிய கலைஞர் கோபிராஜூ கூறுகையில்; தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட ஓவியர்கள் உள்ளனர். நான் 5-வது தலைமுறையாக இந்த ஓவியங்களை வரைந்து வருகிறேன். தஞ்சை ஓவியத்துக்கு பெருமையே அதன் தங்க இழை மற்றும் ஸ்டோன்கள் பதிப்பது தான். ஊரடங்கு உத்தரவு காரணமாக எங்களது தொழில் அடியோடு பாதிக்கப்பட்டு விட்டது. பல கலைஞர்களுக்கு வெளி மாநிலங்களில் இருந்து கொடுக்கப்பட்ட ஆர்டர் தயார் செய்யப்பட்டு ஓவியங்கள் தயார் நிலையில் உள்ளது.

இவற்றை வழக்கமாக நாங்கள் மரப்பெட்டிக்குள் வைத்து பாதுகாப்பாக பஸ் ரயில்களில் அனுப்புவோம். ஆனால் தற்போது போக்குவரத்து இயங்காததால் அனுப்ப முடியவில்லை. ஒரு ஓவியம் வரைய குறைந்தது 10 நாட்கள் ஆகும். ஆனால் தற்போது விற்பனை ஆகாததாலும் மூலப்பொருட்கள்
வாங்க முடியாததாலும் எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் மக்கள் சகஜ நிலைக்கு திரும்பி நல்ல பொருளாதார நிலைக்கு வந்த பின்னர்தான் மக்களின் பார்வை கலையை நோக்கி திரும்பும். தற்போது உள்ள நிலைமையை பார்க்கும்போது எங்களின் நிலைமை சரியாக குறைந்தது 2 ஆண்டுகள் ஆகும் என நினைக்கிறேன் என்றார்.

தலைப்புச்செய்திகள்