Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பீலா ராஜேஷ் குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டவர் மீது வழக்கு: கே.எஸ்.அழகிரி கண்டனம்

ஏப்ரல் 30, 2020 11:05

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று குறித்து முன்னுக்குப் பின் முரணாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்ததை சமூகவெளியில் கொண்டு வந்த புகைப்படக் கலைஞர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் முதல் கொரோனா வைரஸ் தொற்று பிப்ரவரியிலேயே வந்துவிட்டது. இப்போதுதான் நமக்குத் தெரியவருகிறது என்றும், மார்ச் 9-ம் தேதிக்குப் பிறகுதான் முதல் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது என்றும் முன்னுக்குப் பின் முரணாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் இரு வேறு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

அந்த முரண்பாட்டை சமூகவெளியில் கொண்டுவரும் நோக்கத்தில் குறிப்பிட்ட வீடியோ காட்சிகளை சென்னையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

புகைப்படக் கலைஞர் என்ற முறையிலும், அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையிலும் தனக்குக் கிடைத்த ஆதாரத்துடன் ஸ்ரீராம் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், கடந்த 25-ம் தேதி சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர் தங்களது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்திலிருந்து, "பீலா ராஜேஷ் குறித்த வீடியோவை நீக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து வழக்குத் தொடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

தனது ட்விட்டர் பதிவில் சட்டத்துக்கு விரோதமாக எதுவும் இல்லை என்பதால் அதை ஸ்ரீராம் நீக்க விரும்பவில்லை. அதனைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர் மீது அவதூறு பரப்பியதாக ஸ்ரீராம் மீது சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர் 3 பிரிவுகளில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். காவல் துறையின் இந்தப் பழிவாங்கும் செயலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகளின் தவறுகளைச் சுட்டிக் காட்டவும், விமர்சிக்கவும் அரசியல் சாசனம் நமக்கு கருத்துரிமை, பேச்சுரிமை வழங்கியுள்ளது. சுகாதாரத் துறை செயலாளர் செய்தியாளர் சந்திப்பில் பேசியது அனைத்து ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. அதனை ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவது எப்படி குற்றமாகும் என்பது தெரியவில்லை.

கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் தமிழக அரசை விமர்சித்த பலர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சைபர் கிரைம் காவல் துறையினரின் செயல் கருத்துச் சுதந்திரத்துக்கும், ஊடகச் சுதந்திரத்துக்கும் எதிரானது.

இதுபோன்ற வழக்குகள் மூலம் அரசுக்கு எதிரான சிறு எதிர்ப்புக்குரலைக் கூட அதிமுக அரசு நசுக்க நினைக்கிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. ஊடகச் சுதந்திரத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாக்க புகைப்படக் கலைஞர் ஸ்ரீராம் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்