Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 உதவி ஆய்வாளர்களுக்கு கொரோனா

ஏப்ரல் 30, 2020 11:11

சென்னை: சென்னையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 உதவி ஆய்வாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒருவர் மாங்காடு காவல் நிலையத்திலும், மற்றொருவர் கோயம்பேடு காவல் நிலையத்திலும் பணியாற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் அதன் தாக்கம் அதிகம் உள்ளது. சென்னையில் பாதுகாப்புப் பணியில் உள்ள போலீஸார், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோருக்கும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் ஒருவருக்கும், தலைமைக் காவலர் அந்தஸ்தில் உள்ள உளவுத்துறை போலீஸ் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

நேற்று பேசின் பாலத்தில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்ட 3 தீயணைப்புத் துறையினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றும் 2 உதவி ஆய்வாளர்களுக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் சென்னை மாங்காடு காவல் நிலையத்தில் ஸ்பெஷல் மொபைல் இன்சார்ஜ் ஆக கடந்த ஏழு மாதங்களாக வேலை செய்து வருகிறார். அவர் அதே பகுதியில் காவலர் குடியிருப்பில் கடந்த 14 ஆண்டுகளாக மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் குடியிருந்து வருகிறார்.

கடந்த 28-ம் தேதி (நேற்று முன்தினம்) உடல் நிலை சரியில்லாமல் சளி அதிகமாக இருக்கவே எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றார். அங்கு அவருக்கு பிசிஆர் பரிசோதனை செய்ததில் நேற்றிரவு 11 மணிக்கு, அவருக்கு ெகாரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் நேற்றிரவு 12.45 மணிக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அந்தக் காவலர் குடியிருப்பில் மொத்தம் 6 வீடுகள் உள்ளன. அதில் 5-வது எண் வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்று இருப்பதால் மீதமுள்ள 5 வீடுகளில் மொத்தம் 21 நபர்கள் உள்ளனர். அதில் 12 பேர் பெண்கள். பாதிக்கப்பட்ட நபரைத் தவிர மீதமுள்ள 20 நபர்களுக்கு மதுரவாயலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

இதேபோன்று கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் தற்போது கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்