Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவை வெல்ல மே மாதம் ரொம்ப முக்கியம்: ஹாட்ஸ்பாட்டுகளில் தீவிரம் காட்ட மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

மே 01, 2020 05:21

“கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மே 3ம் தேதி வரை இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவானது நெருங்கும் நிலையில் மே மாதம் கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் போராட்டம் வெற்றியும் அடையலாம் அல்லது தோல்வியிலும் முடிவடையலாம். எனவே, ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் தீவிர கட்டுப்பாடுகள் வகுப்பது அவசியம்,” என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இது மே 3ம் தேதி முடிவடைகிறது. எனினும் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா கட்டுப்பாட்டில் இல்லை. இதனிடையே கடந்த திங்கள்கிழமை மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் நிலையில் நாட்டின் பொருளாதாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம் என்றார்.
இந்நிலையில் கொரோனா லாக்-டவுன் மே 3க்கு பிறகும் நீட்டிக்கப்படும் என்றும், பல மாவட்டங்களில் மக்களுக்கும் குறிப்பிட்ட சேவைகளுக்கும் சில தளர்வுகள் விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்த ஹாட்ஸ்பாட் மாவட்டங்களின் எண்ணிக்கையில் 170- லிருந்து 129 ஆக கடந்த 15 நாட்களில் குறைந்துவிட்டது. அதே வேளையில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்கள் அல்லது பச்சை மண்டலங்கள் 325-லிருந்து 307 குறைந்துவிட்டது என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த காலகட்டத்தில் ஆரஞ்சு மண்டலங்களின் எண்ணிக்கையும் 207-லிருந்து 297 ஆக அதிகரித்தது. இதுகுறித்து நொய்டாவை சேர்ந்த நுரையீரல் தொற்று மருத்துவர் டாக்டர் ராஜேஷ் குப்தா கூறியதாவது:
லாக்-டவுனால் கொரோனா வைரஸை கொல்ல முடியாது. அந்த வைரஸ் தொற்றின் வேகத்தை குறைக்கும் அவ்வளவே என்பதை முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டும். அடுத்த இரு வாரங்கள் அல்லது மேலும் சில நாட்களுக்கு சிகப்பு மண்டலங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டும். பச்சை மண்டலங்களில் வேண்டுமானால் ஊரடங்கை தளர்த்திக் கொள்ளலாம். ஆனால், பச்சை மண்டலங்களில் உள்ளோரும் சிகப்பு மண்டலங்களில் உள்ளோரும் எந்த வகையிலும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். வரும் மே மாதம் கொரோனா வைரஸை எதிர்த்து இந்திய அரசின் போராட்டம் வெற்றியும் பெறலாம், தோல்வியும் அடையலாம். எனவே, கொரோனா அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் இருப்பது மிகவும் முக்கியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர் அரவிந்த் குமார் கூறியதாவது:
ரயில் சேவைகள், விமான சேவைகள், மாநிலங்களுக்கிடையே பேருந்து சேவைகள், மால்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், மத ரீதியிலான இடங்கள் ஆகியவை தொடர்ந்து மூடப்படுவது முக்கியம். பச்சை மாவட்டங்களின் எல்லைகள் சீலிடப்பட வேண்டும். அங்கு சமூக விலகல் அவசியம் கடைப்பிடிப்பது, கைகளை சோப்பு போட்டு கழுவுவது, மாஸ்க்குளை போடுவது ஆகியன தங்கள் வாழ்வியலின் ஒரு பகுதியாக மக்கள் கருத வேண்டும். அது போல் கொரோனா அதிகம் உள்ள மாவட்டங்களில் லாக்-டவுன் தொடர வேண்டும். மே மாதம் முக்கியமானது. இந்தியா இதுவரை கொரோனாவுக்கு எதிராக நடத்திய போராட்டம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், இதை பயனுள்ளதாக்க சிகப்பு மண்டலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட 9 மாநிலங்களில் 15 மாவட்டங்களில் கொரோனா அதிகம் பாதித்துள்ளதாக அரசு அடையாளம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்