Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவை விட பசி நிறைய பேரின் உயிரை பலி வாங்கிவிடும்: இன்ஃபோசிஸ் கவுரவு தலைவர் உருக்கம்

மே 01, 2020 05:23

“இந்தியாவில் லாக்-டவுன் நீடித்தால், ஒரு கட்டத்தில், கொரோனா வைரஸ் நோயால் இறப்பவர்களை விட, பசியால் இறப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகிவிடும்,” என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கெளரவ தலைவர் நாராயணமூர்த்தி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த வியாபார தலைவர்களுக்கான ஆன்-லைன் கருத்தரங்கில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கவுரவ தலைவர் நாராயண மூர்த்தி பங்கேற்று பேசியதாவது:
இந்தியாவில் சுமாராக 19 கோடி பேர், முறை சாராத வியாபாரங்கள், சுய தொழில் மற்றும் கணக்கில் வராத சிறு, சிறு நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேரும் லாக்-டவுனால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து இருக்கிறார்கள். மேலும் லாக்-டவுன் நீடித்தால், இவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் இழப்பார்கள். ஏற்கனவே கொரோனா வைரஸ் பிரச்சனையால், இந்தியாவில் பெரும்பாலான கம்பெனிகள் 15 - 20 சதவிகித வருவாயை இழந்து இருக்கிறது. இது நேரடியாக அரசின் சரக்கு மற்றும் சேவை வரி போன்ற அரசு வரி வருவாய்களில் எதிரொலிக்கும்.

இந்த நேரத்தில் நாம் முக்கியமாக ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா இப்படியே, நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து லாக்-டவுனில் இருக்க முடியாது. கொரோனாவால் இந்தியாவில் இறப்பவர்களின் எண்ணிக்கை 0.25 - 0.50 சதவிகிதமாக இருக்கிறது. அதோடு இந்தியாவில் லாக்-டவுன் நீடித்தால், ஒரு கட்டத்தில், கொரோனா வைரஸ் நோயால் இறப்பவர்களை விட, பசியால் இறப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகிவிடும்.

இந்த மாதிரியான இக்கட்டான இந்த சூழலை ஏற்றுக் கொண்டு, கொரோனா வைரஸ் உடனேயே நாம் வாழத் தொடங்க வேண்டும். கொரோனாவுக்கு முன் நாம் என்ன செய்து கொண்டு இருந்தோமோ அதை மீண்டும் செய்யத் தொடங்க வேண்டும். எளிதில் பாதிக்க வாய்ப்பு இருப்பவர்களை பாதுகாக்க வேண்டும். அதோடு, ஐ.டி. கம்பெனி ஊழியர்களை, அலுவலகத்துக்கு அழைத்து வந்து, முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வேலை பார்க்கச் சொல்லி சோதனை செய்ய வேண்டும். நாஸ்காம் தரப்பு, ஏற்கனவே, ஐ.டி. கம்பெனிகளிடம் 10 - 15 % ஊழியர்களுடன் செயல்பட பரிந்துரைத்து இருக்கிறார்கள்.

அதோடு சமூக இடைவெளி விட்டு இருப்பது போன்றவைகளை எல்லாம் அலுவலகத்தில் கடைபிடிக்க முடிகிறதா? என்பதையும் கண்காணிக்கச் சொல்லி இருக்கிறார்கள். மீண்டும் ஊழியர்களை அலுவலகத்துக்கு அழைத்து வர அரசு ஒரு யோசனையை முன் வைக்க வேண்டும். அது ஒட்டு மொத்த துறைக்கும் நாட்டுக்கும் நல்லது எனக் கோரிக்கை வைத்திருக்கிறது நாஸ்காம் தரப்பு.

இந்த கொரோனா வைரஸ் பெரும் தொற்று நோயால், இந்திய ஐ.டி. துறைக்கு நிறைய வாய்ப்புகளைக் கொடுக்கும் உலகளவில் கம்பெனிகள் தங்கள் செலவுகளைக் குறைப்பார்கள். அதோடு டெக்னாலஜிகளில் முதலீடு செய்வார்கள். உள்நாட்டு கம்பெனிகள், தங்கள் சேவைகளைத் தொடர்ந்து செய்து வியாபாரத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி பேசினார்.

தலைப்புச்செய்திகள்