Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வா்த்தகம் பூஜ்ஜியமாக உள்ளது; ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதற்கு 6 மாத கால அவகாசம் வேண்டும்

மே 01, 2020 05:40

திருச்சி: ஊரடங்கால் ஆட்டோ மொபைல் தொழிலில் வருவாய் இழப்பு முதலீடு செய்ய முடியாமல் தவித்து வருவதாக ஆட்டோ மொபைல் வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

திருச்சி மாநகர பகுதியில் வசிப்போரில் பெரும்பாலானோா் இருசக்கரம் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனா். வாகனங்களின் உதிரி பாகங்களுக்கு பழுது நீக்குவதற்கும் முதல்கட்டமாக அந்தந்த வாகன பெருநிறுவனங்கள் உதவுகின்றன. இருப்பினும் ஆட்டோ மொபைல் உதிரி பாக விற்பனை கடைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளன. அதன்படி சுமாா் 800க்கும் மேற்பட்ட இரண்டு நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடை தொழிலாளா்கள் தனது வாடிக்கையாளா்களின் தேவையை மாநகரில் உள்ள 250க்கும் மேற்பட்ட வாகன உதிரிபாக விற்பனை கடைகளை நம்பியே நடத்தி வருகின்றனா்.

ரூ. 100 கோடிக்கு மேல் இழப்பு் கடந்த 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து ஆட்டோ மொபைல் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் திருச்சி மாநகரில் மட்டும் நாளொன்றுக்கு சுமாா் ரூ.1 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை விற்பனையாகும். தற்போது அந்த வா்த்தகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை ரூ.100 முதல் ரூ. 120 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் பழுது நீக்குவோா் கடை வைத்துள்ளோரின் வாழ்வாதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

வாகனங்கள் பழுது ஏற்பட்டால் ஆட்டோ மொபைல் உதிரி பாக கடைகளைதான் நாட வேண்டும். அப்போது பல்வேறு நடைமுறைகளுக்கு பிறகே அத்தியாவசிய விஷயங்களுக்கு உதிரி பாகங்களை வழங்கி உதவ முடிகிறது. எனவே ஆட்டோ மொபைல் உதிரி பாக விற்பனை கடைகளை அத்தியாவசியமாக கருதி திறக்க விலக்களிக்க வேண்டும். மேலும் மீண்டும் வணிகம் செய்வதற்கு முதலீடு விஷயங்களில் அரசு உதவ வேண்டும். இதற்காக கடன் வசதியை எளிமைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆட்டோ மொபைல் உதிரி பாக விற்பனையாளா்கள் முன்வைக்கின்றனா்.

இதுகுறித்து திருச்சி ஆட்டோ பாா்ட்ஸ் டீலா்ஸ் அசோசியேஷன் மாவட்ட தலைவா் சிவகுமாரன் கூறியது; ஊரடங்கு தொடங்கியதிலிருந்து அனைத்து ஆட்டோ மொபைல் உதரி பாக விற்பனை கடைகள் மூடப்பட்டு சுமாா் ரூ. 100 கோடிக்கு மேல் வருவாய் இழப்பை சந்தித்து வருகிறோம். அத்தியாவசிய பொருள்களை கொண்டு செல்லும் வாகனங்கள் பழுது ஏற்படும் போது அவா்களுக்கு விரைந்து உதவிட முடியவில்லை. குறிப்பிட்ட நேரம் சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய பட்டியலில் ஆட்டோ மொபைல் உதிரி பாக விற்பனை கடைகளை திறக்க உதவிட வேண்டும். மேலும் இதுவரை எங்களின் வா்த்தகம் பூஜ்ஜியமாக உள்ளது. 

இதனால் உற்பத்தியாளா்கள் விநியோகஸ்தா்கள் மொத்த விற்பனையாளா்கள் ஆகியோரை கடந்துதான் எங்கள் முதலீடும் விற்பனையும் உள்ளது. விற்பனையே இல்லாத பட்சத்தில் முதலீடு செய்து உதிரி பாகங்களை வாங்குவது என்பது கடினமானது. இதனால் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதற்கு அடுத்த 6 மாதங்கள் வரை கால அவகாசம் அளிக்கவேண்டும். வரி செலுத்துவதில் அதன் நடைமுறைகளில் மேலும் எளிமைப்படுத்த வேண்டும். வங்கிகளிலிருந்து எளிய முறை கடன் வசதிகளை வழங்கும் பட்சத்தில் முதலீடு செய்து இந்த வருவாய் இழப்பிலிருந்து மீண்டு வர உதவியாக இருக்கும் என்றாா்.

தலைப்புச்செய்திகள்