Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கிற்கு மத்தியில் வெளிநாடுகளுடன் நட்பை வளர்த்த வெளியுறவு அமைச்சகம்

மே 01, 2020 06:14

கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு காலத்தில் முடங்கிக் கிடக்காமல், கிடைத்த வாய்ப்பை வெளியுறவுத் துறை பயன்படுத்திக் கொண்டுள்ளது. பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் பேசி, தேவையான உதவிகளை செய்து நட்புறவை மேம்படுத்திக் கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால், கிட்டத்தட்ட உலக நாடுகள் அனைத்திலும், ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து நாடுகளும் தங்களுடைய எல்லைகளை மூடியுள்ளன. இதனால், வெளிநாட்டவர் வெளியேற முடியாமல் பரிதவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நம் வெளியுறவு அமைச்சகம், பல்வேறு நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு, பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.அந்த வகையில், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வெளிநாடுகளில் உள்ள இந்தியத் துாதர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் பேசினார். இதற்கு முன், மார்ச், 20ல் இது போன்று அவர் பேசினார். அப்போது, வெளிநாடுகளில் பரித விக்கும் இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்படி, துாதர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார். தற்போதைய கூட்டத்தில், வரும் வாரங்களில், இந்தியர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுடன், நம் நாட்டில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஒப்பிட்டு கூறும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், இங்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, வெளிநாடுகள் என்ன நினைக்கின்றன போன்ற விபரங்களும் சேகரிக்கப் பட்டுள்ளன.

இவ்வாறு, அமைச்சர் ஒரு பக்கம் நடவடிக்கை எடுக்கும் நிலையில், வெளியுறவு அமைச்சக மூத்த அதிகாரிகள், இந்தியாவில் உள்ள வெளிநாட்டுத் துாதர்களை சந்தித்து வருகின்றனர். கொரோனாவுக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து, அவர்கள் விளக்கம் அளித்துஉள்ளனர். கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டாலும், மற்ற நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க இந்த பேச்சுகள் உதவும்.

கடந்த மார்ச், 30ல், வெளிநாடுகளில் உள்ள இந்தியத் துாதர்களுடன், வீடியோ கான்பரன்ஸ் மூலம், பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அதன் பின், கடந்த, 30 நாட்களில், 30க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்களுடன் அவர் பேசியுள்ளார். வைரஸ் தடுப்பில் இணைந்து செயலாற்றுவது, தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருப்பது போன்ற உறுதிகளை அவர் அளித்து உள்ளார். இது போலவே, ஜெய்சங்கரும், பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் பேசியுள்ளார்.

'ஜி - 20' நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு சமீபத்தில் நடந்தது. அதில், 'உலகெங்கும், 85 நாடுகளுக்கு தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்களை இந்தியா அளித்துள்ளது' என, ஜெய்சங்கர் குறிப்பிட்டார். இதற்கு, உலக நாடுகள் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தன.

ரஷ்யா, பிரேசில், அமெரிக்கா என, பெரிய நாடுகளுடன் மட்டுமல்லாமல், பல குட்டி நாடுகளுடனும், வெளியுறவு அமைச்சர் பேசி, உதவிக்கரம் நீட்டியுள்ளார். வெறும், ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட, மிகவும் சிறிய ஆப்ரிக்க நாடான கிரனடா; எட்டு லட்சம் மக்கள் தொகை கொண்ட, எரிமலைகள் அடங்கிய ஆப்ரிக்க நாடான கோமரோஸ் ஆகியவற்றின் தலைவர்களுடனும் பேசப்பட்டுள்ளது.உலக நாடுகள், கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பாகச் செயல்படும் நாடாக இந்தியாவைப் பார்க்கின்றன. நம் வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளே இதற்கு முக்கிய காரணமாகும்.

உலக சுகாதார அமைப்பின் தலைமை பொறுப்பை, அடுத்த மாதம் இந்தியா ஏற்க உள்ளது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், நிரந்தரமில்லாத உறுப்பு நாடாக அடுத்த ஆண்டு இந்தியா நியமிக்கப்பட உள்ளது. இந்நிலையில், வெளியுறவு அமைச்சகத்தின் நடவடிக்கைகள், உலகின் மீதான இந்தியாவின் கரிசனத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன.

தலைப்புச்செய்திகள்