Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கல்பாடி, அய்யலூர் ஊராட்சி பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் மக்கள்

மே 01, 2020 09:14

பெரம்பலூர்: கல்பாடி அய்யலூர் ஊராட்சி பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

பெரம்பலூர் ஒன்றியத்துக்குட்பட்ட கல்பாடி, அய்யலூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து போதிய விழிப்புணர்வு ஊராட்சி நிர்வாகத்தால் ஏற்படுத்தப்படவில்லையாம். இதனால் கல்பாடி, அய்யலூர் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட கிராம பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் மீறி வருகிறார்கள். அந்த பகுதிகளில் எப்போதும் பொதுமக்களின் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கிறது.

மரத்தடி வழிபாட்டு தலங்களில் ஆண்கள் கூட்டமாக அமர்ந்து கொண்டு பேசியும் இளைஞர்கள் விளையாடியும் பொழுதை கழித்து வருகின்றனர். வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்களில் பலர் முககவசம் அணிவதில்லை. மேலும் கல்பாடி, அய்யலூர் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் பஞ்சம் உள்ளது. கல்பாடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 2 நாட்களுக்கு ஒரு முறை தான் தெரு குழாய்களில் கிணற்று குடிநீர் வினியோகிக்கப்படுமாம். 

மேலும் அந்த பகுதிகளில் காவிரி குடிநீர் வினியோகம் கிடையாததால் அந்த கிராமங்களின் வழியாக வெளியூர்களுக்கு காவிரி நீர் செல்லும் பிரதான குழாய்களின் கேட் வால்வுகளில் வெளியேறும் தண்ணீரை பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பிடித்து செல்கின்றனர். மேலும்
குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். கல்பாடி ஊராட்சி பகுதிகளில் சரிவர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படவில்லையாம். மேலும் கல்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே செல்லும் சாலையின் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.

இதேபோல் அய்யலூர் ஊராட்சிக்குட்பட்ட கிராம பகுதிகளில் போதிய அளவு குடிநீர் வினியோகிக்கப்படுவதில்லையாம். இதில் அய்யலூர் குடிக்காட்டில் உள்ள கிணற்றின் அருகே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளில் மின்மோட்டார் பழுதால் தண்ணீர் நிரப்பப்படுவதில்லை. இதனால் அந்தப்பகுதி பொதுமக்கள் கிணற்றில் கயிறு மூலம் வாளியை கட்டி தண்ணீர் இறைத்து குடங்களில் பிடித்து செல்வதால் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். மேலும் அய்யலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள வடிகால் தூர்வாரப்படாததால் கழிவுநீர் வெளியே செல்ல முடியாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. 

இதில் பன்றிகள் உலா வந்து கிளறுவதால் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட 2 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்