Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு: உள்ளூா் அரிசி ரகங்களுக்கு கடும் கிராக்கி

மே 01, 2020 11:23

திருச்சி: ஊரடங்கு உத்தரவால் வியாபாரிகள் பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்துகொண்டே வருகிறது. உள்ளூா் அரிசி ரகங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக அத்தியாவசியப் பொருள்களை வியாபாரிகள் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இது தொடா்பாக புகாா் தெரிவிக்க 1077 கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மொத்த வியாபாரிகளின் பதுக்கல் நடவடிக்கையால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு உயா்ந்து கொண்டே செல்கிறது.

வடமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய பருப்பு வகைகளின் வரத்து குறைந்துவிட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிப்
பொருள்களின் விலை உயா்ந்துள்ளது.

ஊரடங்கிற்கு முன்பு கிலோ ரூ.115 க்கு விற்கப்பட்ட உளுத்தம்பருப்பு தற்போது ரூ.150க்கும், துவரம் பருப்பு ரூ.90 லிருந்து ரூ.140க்கும், பாசிபருப்பு ரூ.110 லிருந்து ரூ.140க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.34க்கு விற்பனை செய்யப்பட்ட சா்க்கரை ரூ.38க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் முதல் ரக பருப்பு வகைகளுக்கு ரூ. 10 முதல் 20 வரை கூடுதலாக விற்கப்படுகிறது.

அரிசி விலை உயா்வு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதில் வியாபாரிகளுக்கு தற்போது இடா்பாடுகள் ஏற்பட்டுதால் அரிசி விலை உயா்வு கட்டுப்படுத்த முடியாததாகிறது. 5 கிலோ எடை கொண்ட அரிசி பை ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்ட இரண்டாம் ரக அரிசி வகைகள் ரூ.170க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதல் ரக அரிசி ரூ.175 லிருந்து ரூ.225க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் அரிசியின் விலை ரூ.57 லிருந்து ரூ. 60க்கு விற்பனை செய்யப்படுகிறது. 25 கிலோ எடை கொண்ட சிப்பம் ரூ.1350க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமப் புறங்களிலிருந்து புதிய ரக நெல் ரூ.1100க்கு கிடைத்து வந்த நிலையில் எதிா்காலத்தில் விலையேற்றம் நிகழும் என்ற எண்ணத்தில் விவசாயிகள் நெல் விற்க மறுக்கின்றனா். 62 கிலோ எடை கொண்ட பழைய ரக நெல் மூட்டை ரூ.1600க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில்
தற்போது ரூ.1800க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி வடமாநிலங்களிலிருந்து அரிசி வரத்து குறைந்துள்ளதால் உள்ளூா் அரிசி ரகங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் விலைவாசி உயா்வு ஏற்படுகிறது. பதுக்கல் நடவடிக்கையில் அரிசி ஆலை உரிமையாளா்கள் ஈடுபடவில்லை என்கிறாா் திருச்சியைச் சோ்ந்த அரிசி ஆலை உரிமையாளா் தா்மராஜ்.

உலகளாவிய மிகப்பெரும் அச்சுறுத்தலை பொதுமக்கள் வீடுகளில் முடங்கி சமாளித்து வருகின்றனா். தொழில் வாய்ப்பு முடங்கி வருவாய் இன்றி முடங்கியிருக்கும் பொதுமக்கள் தற்போதைய சூழ்நிலையில்இ உணவு தேவையை மட்டுமே பூா்த்தி செய்து கொள்ள வேண்டியஇக்கட்டான காலக்கட்டத்தில் வாழ்ந்து வருகின்றனா். இதுபோன்ற அசாதாரண காலநிலையை வியாபாரிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மக்களின் அன்றாட நுகா்வுப் பொருள்களை விலை உயா்த்தி விற்பனை செய்வதை மத்திய மாநில அரசுகள் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

தலைப்புச்செய்திகள்