Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு: சர்வதேச சந்தையில் அதிக விற்பனைக்கு வாய்ப்பு

மே 01, 2020 11:27

கோவில்பட்டி: “கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பதன் மூலம் சர்வதேச சந்தையில் இதன் விற்பனைக்கு அதிக வாய்ப்பு உள்ளது,” என்று வர்த்தகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பழனி பஞ்சாமிர்தம், திண்டுக்கல் பூட்டு என ஏற்கனவே 34 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் 35-வதாக கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கான முன் முயற்சியை எடுத்தவர் தற்போதைய திருப்பூர் மாவட்ட ஆட்சியரான விஜயகார்த்திகேயன். 2014ல் கோவில்பட்டி துணை ஆட்சியராக இருந்த போது அவர் மேற்கொண்ட முயற்சிக்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது. இனி கோவில்பட்டி கடலைமிட்டாய் என்ற பெயரில் யாரும் போலியாக தயாரித்தும் விட முடியாது. ஏற்கனவே, வெளிநாடுகளிலும் ஆன்-லைனிலும் கோவில்பட்டி கடலை மிட்டாய் பிரபலமானது. தற்போது புவிசார் குறியீடும் கிடைத்திருப்பதால் சர்வதேச சந்தையில் கோவில்பட்டி கடலைமிட்டாய் விற்பனை அதிகரிக்கும் என்கின்றனர் வர்த்தகர்கள்.

புவிசார் குறியீடு- எப்படி உதவும்?:

புவிசார் குறியீடு என்பது குறிப்பிட்ட தயாரிப்பு பொருளின் பாரம்பரியமான தரத்தை அங்கீகரிப்பதாகும். இதற்கு என தனியாக முத்திரையுடன் கூடிய வாக்கியம் வழங்கப்படும். இந்த புவிசார் குறியீடு என்பது உற்பத்தியாளர் அமைப்புகள், கூட்டுறவு சங்கங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். எந்த ஒரு தனிநபருக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட மாட்டாது. இதனால் போலி தயாரிப்புகள் தடைபடும்.

உதாரணமாக கோவில்பட்டி கடலைமிட்டாய் என்ற பெயரில் பிற ஊர்களில் கடலைமிட்டாய் தயாரிக்கப்பட்டால் அதில் இந்த புவிசார் குறியீடு லோகோ இடம் பெறாது. இதன் மூலம் அந்த பொருட்கள் போலி என்பது தெரிந்துவிடும். மேலும் புவிசார் குறியீட்டுடன் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் உயரிய மதிப்பும் உண்டு. இதன் மூலம் ஆர்டர்கள் அதிக அளவு கிடைக்கும்.

காலம், காலமாக ஒரு குறிப்பிட்ட பொருட்களின் தயாரிப்பில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் முழுமையான பலனை அனுபவிக்கும். இதனால்தான் தமிழகத்தின் பாரம்பரிய பொருட்கள் பலவற்றுக்கும் புவிசார் குறியீடு கோரி விண்ணப்பித்து வருகின்றனர். அப்படி புவிசார் குறியீடு கிடைத்தால் அதை கொண்டாடவும் செய்கின்றனர்.

தலைப்புச்செய்திகள்