Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெளிமாநில தொழிலாளர் 1,200 பேர் ஜார்கண்ட் பயணம்: ரயிலில் வழியனுப்பிய தெலுங்கானா அதிகாரிகள்

மே 01, 2020 11:44

வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர் அனுப்பும் பணி துவங்கியுள்ளது. முதல்கட்டமாக தெலுங்கானாவிலிருந்து 1,200 தொழிலாளர்கள், ஜார்கண்ட் கிளம்பினர். கை தட்டி, அதிகாரிகள் அவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது. தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கான திட்டத்தை மாநில அரசுகள் வகுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது.

அதேவேளையில் கொரோனா தொற்று இல்லாதவர்களை மட்டுமே சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும் மாநில அரசுகளை உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. மஹாராஷ்டிரா, சூரத் போன்ற நகரங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கூறி போர்க்கொடி உயர்த்தியிருந்தனர். ஊரடங்கு காரணமாக வேலையின்றி, வருமானமின்றி ஒரே இடத்தில் தங்களால் அடைபட்டு கிடக்க முடியாது என புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சூரத் வீதிகளில் இறங்கி போர்க்குரல் உயர்த்தினர்.

இந்நிலையில்தான், மத்திய அரசு இப்படி ஒரு முடிவை எடுத்தது. தெலுங்கானாவின் லிங்கம்பள்ளியில் இருந்து ஜார்க்கண்டின் ஹதியாவுக்கு 1,200 தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு, முதல் ரயில் நேற்று அதிகாலை 4:50 மணிக்கு தனது பயணத்தைத் தொடங்கியது. 24 கோச் கொண்ட இந்த ரயில் நேற்று இரவு 11 மணிக்கு ஜார்க்கண்டில் உள்ள ஹதியாவுக்கு சென்று சேந்தது. 

யணத்தின்போது சமூக இடைவெளி பராமரிக்கப்படுகிறது. சொந்த மாநிலங்கள் சென்ற பிறகு, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து உரிய செயல்முறைகளும் அவர்களுக்கு அரசின் வழிகாட்டுதல்களின்படி பின்பற்றப்படும். ரயில் கிளம்பும் மாநிலம், சென்று சேரும் மாநிலம் ஆகியவற்றின் ஒப்புதல்கள் இருந்தால் மட்டுமே ரயில்களை இயக்க ரயில்வே துறை சம்மதிக்கும்.

குஜராத்தின் சூரத்திலிருந்து ஒடிசாவின் கஞ்சம் வரை செல்லும் ரயில், நேற்று மாலை 4 மணிக்கு புறப்பட்டது. சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்ப இந்திய ரயில்வேயின் சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்