Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புட்டபர்த்தி சென்று வந்த முதியவருக்கு கொரோனா: பச்சை மண்டலமான கிருஷ்ணகிரியில் முதல் தொற்று!

மே 02, 2020 01:08

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடையும் நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் பச்சை மண்டலங்களில் தளர்வுகளை கொடுக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டது. மற்ற மாவட்டங்கள் சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், தமிழகத்தில் பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு முதல் முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வேப்பனஹள்ளி அருகே நல்லூரைச் சேர்ந்த 67 வயது முதியவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

விசாரணையில், இந்த முதியவர் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்றுவிட்டு 2 மாதங்கள் கழித்து கடந்த 4 நாட்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி திரும்பியது தெரியவந்தது. இவருடன் சென்ற மேலும் 4 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அது போல் அந்த முதியவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் இவர்கள் வசித்து வந்த தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே புட்டபர்த்தி சாய்பாபா கோயிலுக்கு சென்று வந்த கடலூரை சேர்ந்த 69 வயது முதியவருக்கு கொரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது. இதுவரை கொரோனா பாதிக்காத மாவட்டமாக இருந்து வந்த நிலையில் கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது தமிழக அரசை கவலையடையச் செய்துள்ளது.

ஆந்திரா சென்று இரண்டு மாதங்கள் கழித்து அனுமதி இல்லாமல் மாவட்டத்திற்கு வந்ததால் 67 வயது முதியவர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரியில் நாளை 4 ம் தேதி முதல் 50 சதவீத தளர்வு வழங்க இருந்த நிலையில் நேற்று வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் ஆரஞ்சு மண்டலத்திற்கு சென்ற கிருஷ்ணகிரி பகுதியில் தளர்வு நிறுத்தப்படும் என்று தெரிகிறது.

தலைப்புச்செய்திகள்