Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை வந்தார் ராகுல் காந்தி: நாகர்கோவிலில் இன்று பிரசாரம்

மார்ச் 13, 2019 06:00

சென்னை: தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை வந்தார்.  
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை தி.மு.க-காங்கிரஸ் இணைந்து சந்திக்கிறது. தி.மு.க-காங்கிரஸ் கூட் டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்துள்ளன. 

தமிழகத்தின் பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ், தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி விட்டது. 

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார கூட்டம் நாகர்கோவிலில் இன்று நடக்கிறது. இதில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்கிறார்.  

இதற்காக அவர், இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்பு மதியம் 2 மணிக்கு திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் செல்கிறார். 

நாகர்கோவிலில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் மாலை 3 மணிக்கு தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் முதல் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடக்கிறது.   

இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை தாங்குகிறார். 

தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இந்த மேடையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதுதவிர கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேச உள்ளனர். 

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார கூட்டம் என்பதால் தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்