Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு உதவுங்கள்: நடிகர்களுக்கு லாரன்ஸ் வேண்டுகோள்

மே 02, 2020 02:03

சென்னை: ஊரடங்கு உத்தரவால் முடங்கிப்போன தினக்கூலி தொழிலாளர்கள் நலன் கருதி ரஜினிகாந்த் 100 மூட்டைகள் அரிசி வழங்கியதை தொடர்ந்து, கமல், அஜித், விஜய், சூர்யா உள்ளிட்டோரிடமும் உதவிகள் செய்ய முன்வருமாறு நடிகர் லாரன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸின் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்துறை முற்றிலும் முடங்கியிருப்பதால் தினக்கூலியை நம்பியுள்ள தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பலர் அன்றாட உணவுக்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. வறுமையில் தவிக்கும் மக்களுக்கு பலரும் உணவு வழங்குவது, உணவுப்பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்களை வழங்குவது என உதவி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் லாரன்ஸ், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பணமாகவும் மளிகைப் பொருட்களாகவும் வாரி வழங்கி வருகின்றனர். ஏற்கனவே 4 கோடி வரை நிதி உதவி செய்திருக்கும் லாரன்ஸ், பலருக்கும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளதாவது:
 
இதுவரை தான் நிவாரண நிதிகளை நன்கொடையாக கொடுத்திருப்பதையும், ஏழைகளுக்கு உதவுவதன் மூலம் தனது கடமையை எப்படி செய்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். பலரும் தன்னிடம் உதவி கேட்டு தன்னை தொடர்பு கொண்டு வருகின்றனர். அவர்கள் கேட்பது பணம் அல்ல, உணவுக்கு தேவையான பொருட்கள்தான் என்றும் கூறியுள்ளார். தன்னால் எல்லோருக்கும் உதவ முடியவில்லை என்று கூறியுள்ள லாரன்ஸ், இதுகுறித்து தனது தம்பி எல்வினிடம் பேசிய போது அவர், மற்ற நண்பர்களிடம் உதவி கேட்கலாம் என்று கூறினார்.

இந்த யோசனையை தன்னுடைய குருவான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கூறியதாகவும் அவர் 100 மூட்டை அரிசி வழங்கியதாகவும் கூறியுள்ளார் லாரன்ஸ். இதைத்தொடர்ந்து இந்த முயற்சியில் கைக்கோர்க்க பலருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் லாரன்ஸ். அதன்படி நடிகர்கள் கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்களும் அவர்களின் ரசிகர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என உதவ விருப்பமிருப்பவர்கள் அனைவரும், இந்த முயற்சியில் இணையுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு நடிகர் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்