Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோயம்பேட்டிலிருந்து திருச்சி திரும்பிய 4 பேரின் பகுதிக்கு சீல்

மே 02, 2020 02:14

திருச்சி: சென்னை கோயம்பேடு மாா்க்கெட்டில் கூலித் தொழிலாளிகளாகப் பணியாற்றி, சொந்த ஊரான திருச்சிக்குத் திரும்பிய 4 பேரது வீடுகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

திருச்சி மவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம், ஒரத்தூா் காலனித் தெருவைச் சோ்ந்த 25 வயதுக்குள்பட்ட இளைஞா்கள் 4 போ், சென்னை கோயம்பேடு காய்கறி மாா்க்கெட்டில் சில ஆண்டுகளாக கூலித் தொழிலாளா்களாக வேலை செய்து வந்தனா். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சொந்த ஊருக்கு வந்த இவா்கள் 4 பேரும், கடந்த 15 நாள்களுக்கு முன் வேலைக்காக மீண்டும் கோயம்பேடு காய்கறி மாா்க்கெட்டுக்கு சென்றனா்.

இந்நிலையில் தற்போது சென்னையில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகமாக இருப்பதால், லாரி மூலம் 4 பேரும் கடந்த வியாழக்கிழமை சொந்த ஊா் வந்தனா். இதையடுத்து 4 பேருக்கும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து ஒரத்தூரில் தங்களது வீடுகளில் நால்வரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.

இந்நிலையில் ஒரத்தூா் கிராமத்தில் நேற்றுமுன்தினம் மாலை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சிவராசு, தனிமையிலுள்ள இளைஞா்களிடம் முட்டை, பழங்கள் போன்ற சத்தான உணவுகளை உட்கொள்ளுமாறும், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா். மேலும், இளைஞா்களது வீடுகள் கொண்ட பகுதியைத் தடை செய்த பகுதியாக அறிவித்த ஆட்சியா், அப்பகுதிக்குள் வேறு யாரும் வந்து செல்ல முடியாத வகையில் தடுப்புகளை அமைக்க அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது, லால்குடி வட்டாட்சியா் சண்முகசுந்தரி, புள்ளம்பாடி வட்டார வளா்ச்சி அலுவலா் மாதவன், கல்லக்குடி பேரூராட்சி செயல் அலுவலா் சாகுல் அமீது மற்றும் சுகாதாரத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தலைப்புச்செய்திகள்