Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்: உத்தவ் தாக்கரேவுக்கு ஸ்டாலின் கடிதம்

மே 03, 2020 08:19

சென்னை: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தமிழகத் தொழிலாளர்கள் தமிழகம் திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து உத்தவ் தாக்கரேவுக்கு மு.க.ஸ்டாலின் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தி வருவதற்காக பாராட்டுகிறேன். தாங்கள் எடுத்துவரும் பெருமுயற்சிகள் காரணமாக, கொரோனா பாதித்த மக்கள் வெகுவிரைவில் குணம் அடைவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களையும், நிவாரண உதவிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் நான் தொடங்கிவைத்த ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டம் குறித்து தாங்கள் அறிந்திருக்கலாம். இதன்மூலம் இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. எங்களின் கூட்டு முயற்சியால் லட்சக்கணக்கான மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்கச் செய்துள்ளோம்.

‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின்கீழ் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தமிழக தொழிலாளர்களிடம் தொலைபேசி வாயிலாகப் பேசினேன். அப்போது அவர்கள், தங்களுக்கு மாநில அரசின் நிவாரண உதவிகள் தேவை என்றும் தமிழகத்துக்கு விரைவில் திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

எனவே, மகாராஷ்டிராவில் உள்ள தமிழகத் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரண உதவிகள் கிடைக்கவும், பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் தமிழகத்துக்கு அவர்கள் உடனடியாகத் திரும்பவும் தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்