Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாடுகளின் கால்களில் கட்டப்படும் சலங்கைகள் தேக்கம்: தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பு

மே 03, 2020 10:00

திருச்சி: ஊரடங்கு நீடிப்பதால் ஒரு மாதத்துக்கும் மேலாக சலங்கை செய்யும் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த வெங்கிட்நாயக்கன்பட்டி பகுதி மக்கள் சலங்கை மற்றும் சிலம்பம் செய்வதை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இவர்கள் செய்யும் சலங்கை ஜல்லிக்கட்டின் போது மாடுகளின் கால்களில் கட்டப்படுகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகளின் உரிமையாளர்கள் இவர்களை நாடி வந்து சலங்கையை வாங்கி செல்கிறார்கள். அந்த சலங்கையை கட்டிய மாடுகள் ஓடி வரும் போது கேட்கும் ஜல் ஜல் சத்தம் ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்யும். இதேபோல மதுரை சித்திரை திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்களுக்கு இங்கிருந்து தான் சலங்கைகள் வாங்கி செல்லப்படுகிறது.

தற்போது திருவிழா காலம் என்பதால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாகவே இப்பகுதி மக்கள் சலங்கை செய்வதை தொடங்கி ஆயிரக்கணக்கான சலங்கைகளை செய்து குவித்து விட்டனர். ஆனால் ஊரடங்கு காரணமாக மதுரை சித்திரை திருவிழா மட்டுமின்றி அனைத்து கோவில் திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டு விட்டதால் தயார் செய்யப்பட்ட சலங்கைகள் வீட்டில் தேங்கி கிடக்கின்றன. இதனால் தயார் செய்யப்பட்ட சலங்கையை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

இவர்களுக்கு அரசு சார்பில் பெரிய அளவில் நிவாரணமும் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் வாங்கிய கடனை கட்ட முடியாமல் திண்டாடி வருகின்றனர். அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. சலங்கை தொழிலை மட்டுமே பிரதானமாக கொண்டு வாழ்ந்து வரும் இம்மக்களின வாழ்வாதாரத்தை பாதுகாத்திட அரசு உதவிட வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.

தலைப்புச்செய்திகள்