Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீடாமங்கலத்தில் கைது செய்யப்பட்ட மியான்மரை சேர்ந்த 10 பேர் சென்னை புழல் சிறையில் அடைப்பு

மே 03, 2020 11:11

நீடாமங்கலம்: நீடாமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்ட மியான்மர் நாட்டை சேர்ந்த 10 பேர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மியான்மரை சேர்ந்த 13 முஸ்லிம்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீடாமங்கலம் அருகே உள்ள கோவில்வெண்ணியில் உள்ள ஜாமியா மஜீத் பள்ளிவாசலில் வந்து தங்கி இருந்தனர். இவர்கள் மதபிரசாரத்திற்காக வந்ததாக கூறப்படுகிறது. ஊரடங்கின் காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலையில் இருந்தனர்.

இந்தநிலையில் டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டை சேர்ந்த முஸ்லிம்களுக்கு கொரோனா தொற்று இருந்ததாக தகவல் பரவியது. இந்த மாநாட்டில் கோவில்வெண்ணியை சேர்ந்த ஒருவரும் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு வந்திருந்தார். இதையறிந்த கோவில்வெண்ணி மக்கள் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி வெளிநாட்டு முஸ்லிம்கள் மற்றும் அவர்களுடன் தங்கியிருந்தவர்கள் தொடர்ந்து பள்ளிவாசலில் தங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வருவாய்த்துறையினர் சுகாதாரத்துறையினர் காவல் துறையினர் உடனடியாக பள்ளிவாசலில் தங்கியுள்ளவர்களை அப்புறப்படுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

இதனையடுத்து அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளிவாசலில் தங்கியிருந்த மியான்மரை சேர்ந்த 13 பேர் உள்பட 18 பேரை ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவர்களுக்கு மருத்துவ
பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்தநிலையில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கோவில்வெண்ணியில் தங்கியிருந்த மியான்மரைசேர்ந்த 13 பேர் மீது நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் 13 பேரையும் நீடாமங்கலம் போலீசார் கடந்த மாதம் (ஏப்ரல்) 9-ந் தேதி கைது செய்து நீடாமங்கலம் நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாள் காவலில் வைத்தனர். 

இவர்கள் 13 பேரும் திருவாரூர் மருத்துவக்கல்லூரி கொரோனா சிகிச்சை பிரிவிலும் மத்திய பல்கலைக்கழக கொரோனா சிகிச்சை பிரிவிலும் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டனர். இந்த 13 பேரின் காவலை வருகிற 6-ந் தேதி வரை நீட்டித்து நீடாமங்கலம் நீதிபதி ரோஸ்லின் உத்தரவிட்டு இருந்தார். இதற்கான ஆணைகள் 13 பேருக்கும் நேரில் வழங்கப்பட்டது.

இந்நிலையில் 13 பேரில் 10 பேரை நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் சென்னை புழல் சிறையில் அடைக்க அழைத்து சென்றனர். அங்கு மியான்மரை சேர்ந்த மியோங்ஷிலாங்வின் ஆங்மோ மின்அங் ஸயார்லாட் டார்வுட் மின்மின்டன் ஜமாலுதீன் என்கிற ஜியாமின் ஸாவின் கின்ஸா ஹியாஷின்தெட் ஆகிய 10 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீதி 3 பேரில் மாங்மாங்லாட் டின்யூ ஆகிய 2 பேர் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் மாங்மாங் என்பவர் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக கொரோனா சிகிச்சை பிரிவிலும் போலீஸ் பாதுகாப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்