Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா இல்லாத மாவட்டமானது சிவகங்கை: மருத்துவர், செவிலியர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

மே 03, 2020 01:45

சிவகங்கை: “சிவகங்கை மாவட்டம் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற நிலையை பெற்றுள்ளது,” என்று ஆட்சியர் ஜெயகாந்தன் பெருமிதம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று 12 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. பல்வேறு கால கட்டங்களில் இவர்கள் அவ்வப்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வந்தனர். கடைசி நபர் கடந்த ஏப்.19-ம் தேதி சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவர் பூரண குணமடைந்ததையொட்டி நேற்று முன்தினம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆட்சியர் ஜெயகாந்தன் அவருக்கு பொன்னாடை அணிவித்து, பழங்கள், உணவு பொருட்கள் கொடுத்து அனுப்பி வைத்தார். சிறப்பாக பணியாற்றிய மருத்துவக்கல்லூரி முதல்வர், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆட்சியர் ஜெயகாந்தன் கூறுகையில், “சிவகங்கை மாவட்டம் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற நிலையை பெற்றுள்ளது. மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2 மாத காலத்தில் 4,654 பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் என கண்டறியப்பட்டு அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை 1,461 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது 305 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்,” என்றார்.

இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல், மருத்துவ நிலைய அலுவலர் மீனாள், துணை இயக்குனர் யசோதா மணி, மருத்துவ கண்காணிப்பு அலுவலர் ஷீலா, மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்