Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை மக்கள் மாஸ்க் அணியாமல் அங்கும், இங்கும் சர்வ சாதாரணமாக சுற்றி வருகிறார்கள்: கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

மே 03, 2020 01:50

சென்னை: “சென்னையில் கொரோனா நோயாளிகள் அதிகரிக்க காரணம் நிறைய பேருக்கு கொரோனா இருக்கிறதா? என்பது குறித்து தீவிர பரிசோதனை எடுக்கப்பட்டது தான்,” என கொரோனா தடுப்பு சென்னை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் மிக அதிகமாக 231 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில் 174 பேருக்கு கொரோனா உறுதியானது. சென்னையில் திரு.வி.க. நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய 5 மண்டலங்களில் கொரோனா அதிகமாக பாதிப்பை சந்தித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கொரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னையில் திரு.வி.க. நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய 5 மண்டலங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதாவது 4, 5, 6, 9, 10 ஆகிய மண்டலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்த மண்டலத்தைச் சேர்ந்தவர்களே. சென்னையில் 1,257 கொரோனா நோயாளிகளில் இந்த 5 மண்டலங்களைச் சேர்ந்தவர்கள் 938 பேர் உள்ளனர். இந்த மண்டலங்களில் உள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் சோதனையை முடுக்கிவிட்டுள்ளோம். சென்னையில் நோய் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் அரசு நடத்தும் தீவிர சோதனையே.

கொரோனாவை எதிர்த்து போராட மக்களும் உரிய ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். அவர்கள் வெளியே செல்லும் போது முகக் கவசங்களை அணிய வேண்டும். அரசின் உத்தரவுகளை மதிக்க வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கூட மக்கள் யாரும் முகக் கவசங்களை அணிவதில்லை. மாஸ்க்கிற்கு இரு அடுக்குகள் கொண்ட துணியே போதுமானது. சென்ட்ரலிலிருந்து பேசின் பாலத்திற்கு ஆய்வுக்குச் சென்றோம்.

அப்போது மாஸ்க் அணியாமல் மக்கள் அங்கும், இங்கும் சர்வ சாதாரணமாக சுற்றி வருகிறார்கள். அண்ணா நகர் டவுன் பார்க்கிலும் இதே நிலைதான். கொரோனா பாதிப்பால் வெளியே வரும் போது மாஸ்க் போட வேண்டுமே, போடாமல் ஏன் வந்தீர்கள்? என நாங்கள் கேட்டபோது எங்களுக்கு அது போன்ற அறிகுறிகள் ஏதும் இல்லை. அதனால் மாஸ்க் அணிவதில்லை என சொல்கிறார்கள்.
சமூகத்தை பற்றி எந்த அக்கறையும் மக்களுக்கு இல்லாத நிலையில் நோயை கட்டுப்படுத்த கடும் விதிகளை அமல்படுத்துவதை விட சிறந்த வழி வேறு ஒன்றும் இல்லை. கன்டெய்ன்மென்ட் எனப்படும் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் மக்கள் நிச்சயமாக முகக் கவசம் அணிய வேண்டும்.
இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

இன்று முதல் நோய்க் கட்டுப்பாடு இல்லாத பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுகிறது. இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுடன் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனை நடத்தினர். அப்போது சென்னையில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

தலைப்புச்செய்திகள்