Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கு கால பட்டினிச்சாவுகள் குறித்த கணக்கு எங்கே?: சிதம்பரம் கேள்வி

மே 03, 2020 01:54

“ஊரடங்கு காலத்தில் நிகழ்ந்த பட்டினிச் சாவுகள் எத்தனை என்பதை நாம் யாருமே அறிந்திருக்க முடியாது. எந்த ஒரு மாநில அரசுமே பட்டினிச் சாவுகளை ஒப்புக் கொள்வதும் இல்லை. அது குறித்த எந்த ஒரு கணக்கும் இல்லையே?,” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக ஆங்கில பத்திரிகை ஒன்றில் ப. சிதம்பரம் தெரிவித்திருப்பதாவது:
எந்த ஒரு தடுப்பு மருந்துமே இல்லாமல் கொரோனா தொற்று நோயில் இருந்து விடுபட்டு வருகிறோம். இதனால் ஊரடங்கு தான் கொரோனாவை குணப்படுத்துகிறது என்கிற சிந்தனை வருகிறது. உண்மையில் ஊரடங்கு உத்தரவால் கொரோனாவை குணப்படுத்த முடியாது. அது பரவும் வேகத்தைத்தான் குறைக்க முடியும். ஊரடங்கு என்பது ஒரு தடுப்பு. கொரோனாவை தடுக்கும் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்திக் கொள்வதற்கான ஒரு கால அவகாசம்.

இந்த ஊரடங்கு காலத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்ற பல லட்சம் தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால், அந்த முகாம்கள் மனிதர்கள் வாழ்வதற்கான வசதிகளை கொண்டதாக இருக்கவில்லை. எந்த ஒரு அடிப்படை வசதியுமே இல்லாத புதுடெல்லி முகாம்கள் பற்றி ஊடகங்கள் எழுதியிருந்தன. கழிப்பறைகளைக் கூட பயன்படுத்துவதற்கு காலக்கெடு விதிக்கப்பட்டிருந்ததும் அந்த செய்திகளில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. எந்த வேலையும் இல்லை. எந்த ஒரு வருவாயும் இல்லை. எப்படித்தான் பிற மாநில கூலி தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கையை முகாம்களில் ஓட்ட முடியும்? அவர்களை நம்பியிருக்கும் குடும்பங்களின் கதிதான் என்னவாகும்?

இதனால்தான் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதில் முனைப்பு காட்டுகின்றனர். தற்போது உத்தரப்பிரதேச பிரதேச அரசு பிற மாநிலங்களுக்கு பேருந்துகளை அனுப்பி தொழிலாளர்களை அழைத்து வருகிறது. இப்போதைய நிலையில் தொழிற்சாலைகள் திறக்கும்போதுதான் வேலை இருக்கிறதா?, இல்லையா? என்பது தெரியவரும். வேலை இழப்பு என்பது 21.1 சதவிகிதமாக இருக்கலாம்.

ஊரடங்கை எதிர்கொண்டிருக்கும் சிறு தொழில் நிறுவனங்கள் அதில் இருந்து மீள்வது அவ்வளவு எளிதானது அல்ல. புதிய ஆர்டர்கள் எடுப்பது, ஏற்கனவே வரவேண்டிய நிலுவைத் தொகையை பெறுவது உள்ளிட்ட பல காரணிகள்தான் சிறுதொழில்களை இயக்கக் கூடியவை. இதனால் சிறுதொழில்கள் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்புவது போராட்டமாக இருக்கும். தொழில்துறையினருக்கு உதவப் போகிறோம் என்று மத்திய அரசு அறிவித்த போதும் எதுவும் நடக்கவில்லை.

ஊரடங்கு உத்தரவால் பெரிய நிறுவனங்களும் கூட பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்றன. பணமதிப்பிழப்புக்குப் பின் இந்திய பொருளாதாரம் எழுந்திருக்கவே இல்லை. மேலும் ஊரடங்கு காலத்தில் நிகழ்ந்த பட்டினிச் சாவுகள் குறித்த புள்ளி விவரம் நம்மிடம் இல்லை. எந்த ஒரு மாநில அரசுமே பட்டினிச் சாவுகளை ஒப்புக் கொள்வதும் இல்லை.
இவ்வாறு முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்