Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாணவர்களுக்கு கொரோனா நிவாரண உதவி: புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர்கள் வழங்கல்

மே 03, 2020 02:04

புதுச்சேரி: புதுச்சேரி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் குடும்பங்களுக்கும், பள்ளியின் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தங்கள் சொந்த செலவில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

புதுச்சேரி அருகே பூராணாங்குப்பம் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு புதுக்குப்பம், நல்லவாடு, பூரணாங்குப்பம், தானாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 101 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 10 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையில் வாழ்வாதாரம் இழந்துள்ளவர்களுக்கு தன்னார்வலர்கள், பேராசிரியர்கள் என பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பூரணாங்குப்பம் நடுநிலைப் பள்ளியில் பயிலும் 101 மாணவர்களின் குடும்பங்களுக்கும், அப்பள்ளியைச் சேர்ந்த 10 ஆசிரியர்களும் ஒன்றிணைந்து தங்களின் சொந்த செலவில் நேற்று முதல் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியை தொடங்கியுள்ளனர். முதல் கட்டமாக பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் குடும்பங்களுக்கும் பள்ளி தலைமையாசிரியர் வேளாங்கண்ணி வீரகுமார் மற்றும் சமூக ஆர்வலர் பூரணாங்குப்பம் ஆனந்தன் தலைமையில் தலா 5 கிலோ அரிசியை வழங்கினர். தொடர்ந்து மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்க திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் வேளாங்கன்னி வீரக்குமார் கூறுகையில், “கொரோனா ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கூலி வேலைக்கு செல்பவர்கள் தான். அவர்கள் பசியோடு இருக்கக்கூடாது என்பதற்காக அனைத்து மாணவர்களின் குடும்பங்களுக்கும் உதவ முடிவு செய்து, ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து சொந்த செலவில் அரிசி வழங்கியுள்ளோம். பொருட்களை பெற்றுக் கொள்ள பெற்றோருக்கு வாட்ஸ்அப் குழு மூலம் தகவல் தெரிவித்தோம். அதன்படி, தனிமனித இடைவெளியை கடைபிடித்து அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறோ,” என்றார்.

தலைப்புச்செய்திகள்