Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மருத்துவமனைகள் மீது ரோஜாப்பூ தூவிய ஹெலிகாப்டர்கள்: கொரோனா களப்பணியாளர்களுக்கு மரியாதை

மே 03, 2020 02:17

சென்னை: சென்னையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மீது விமானப் படை மற்றும் கடலோர காவல் படையை சேர்ந்த 4 ஹெலிகாப்டர்கள் மலர்களை தூவி கொரோனா களப்பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தியது. 

கொரோனாவால் நாடு முழுவதும் மக்கள் உயிருக்கு போராடும் நிலையில் தங்களது உயிரை பணயம் வைத்து மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் உள்பட துப்புரவு, துாய்மை பணியாளர்கள் போராடி வருகிறார்கள். அவர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக முப்படைகள் சார்பில்  இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அறிவித்தார்.  இந்த நிகழ்ச்சியின் போது நாடுமுழுவதும் மருத்துவமனைகள் மீது விமான படைகளின் விமானங்கள் மலர்களைத் தூவியது. அது போல் கடற்படையின் சார்பில்  விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களின் மேல் விமானப் படையின் விமானங்கள் அணிவகுப்புடன் முக்கிய மருத்துவமனைகள் மீது விமானங்கள் மலர்களை தூவியது. அது போல் சென்னையிலும் ராணுவத்தினர் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி, சென்னையில் 4 ஹெலிகாப்டர்கள் மலர் தூவின. விமானப்படை மற்றும் கடலோர காவல் படையைச் சேர்ந்த தலா 2 ஹெலிகாப்டர்கள் இதில் ஈடுபட்டன. காலை 10. 30 மணிக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மீதும், 10.35க்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மீதும் மலர் தூவப்பட்டது. அப்போது 3 முறை மருத்துவமனைகளை சுற்றி ஹெலிகாப்டர்கள் வட்டமிட்டன. ஸ்டான்லி மருத்துவமனையிலும் மலர் தூவப்பட்டது. இதையடுத்து மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் சுகாதார பணியாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்த படி வரிசையாக நின்று இந்த நன்றியை ஏற்று கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.

முப்படைகளின் அதிகாரிகள் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து பரிசுகளையும், மலர் கொத்துகளையும் வழங்கினர். அது போல் 11 மணிக்கு கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனை மீது மலர்கள் தூவி டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. இந்த மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் கை தட்டி மரியாதையை ஏற்றனர்.

மாலை சென்னையில் இருக்கும் போர்க்கப்பல்களில் சைரன் ஒலிக்கப்பட்டது. 500 மீட்டர் உயரத்தில் மிக தாழ்வாகவே விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறந்ததால் இதை அந்தந்த பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வீட்டு மொட்டை மாடிகளில் நின்றபடி கண்டுகளித்தனர். இது போல் தங்களுக்கு மரியாதை செலுத்துவது தங்களை ஊக்கப்படுத்துவதாக மருத்துவர்களும், செவிலியர்களும் தெரிவித்தனர்.
இந்தியாவில் ஸ்ரீநகர் முதல் கன்னியாகுமரி வரை இந்த நிகழ்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்