Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் அரசு மருத்துவமனைகள் நிரம்பியது: தயார் நிலையில் பள்ளி, கல்லூரிகள்

மே 04, 2020 06:00

சென்னை : சென்னையில் உள்ள மருத்துவமனைகளில், கொரோனா நோயாளிகள் அதிகரித்துள்ளதால், கல்லுாரிகளை, சிறப்பு மருத்துவமனையாக மாற்ற, மாநகாட்சி திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களை விட, சென்னையில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது.அதனால், நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த, ஒருங்கிணைப்பு சிறப்பு அதிகாரியாக, வருவாய் நிர்வாக ஆணையர், ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், சென்னையில், ராஜிவ் காந்தி, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ஓமந்துாரார் அரசு மருத்துவமனைகளில், 1,700 படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

அதில், கீழ்ப்பாக்கம் மற்றும் ஓமந்துாரார் அரசு மருத்துவமனைகளில், தலா, 400 இடங்கள் நிரம்பியுள்ளன. இதையடுத்து, ஒரு மருத்துவமனைக்கு, தலா, மூன்று கல்லுாரிகளை ஒதுக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில், கொரோனா பாதிப்பு மற்றும் அறிகுறியுடன், பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதத்தில், மருத்துவமைனைகள் தயார் நிலையில் உள்ளன. கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில், தற்போது உள்ள கட்டட வசதியின்படி, மேலும், படுக்கை வசதி அதிகப்படுத்துவது சாத்தியமில்லை. எனவே, கழிப்பறை வசதியுடன் உள்ள கலை கல்லுாரிகளை, மருத்துவமனையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், 1,000 படுக்கை வசதியை ஏற்படுத்த முடியும்; அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சென்னையில், தொற்று பரவ வாய்ப்புள்ளவர்களை தனிமைப்படுத்த, கழிப்பறை வசதியுடன் கூடிய, 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன.மேலும், பல கல்லுாரிகள் மற்றும் பள்ளிகள், மாநகராட்சி சமூக நலக்கூடங்கள், தனியார் திருமண மண்டபங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

அரும்பாக்கம் தனியார் கல்லுாரி, கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாறியுள்ளது.அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து, 84 கொரோனா நோயாளிகள், இந்த கல்லுாரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, மருத்துவமனை டீன், பாலாஜி தலைமையில், டாக்டர் அரவிந்த் குழுவினர், சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களுடன், சித்தா டாக்டர் வீரபாபு குழுவினர், கொரோனா நோயாளிகளுக்கு, நுரையீரல் பாதிக்காத வகையில், சித்த மருத்துவ உணவுகளையும் வழங்கி வருகின்றனர்.

இது குறித்து, டாக்டர் வீரபாபு கூறியதாவது:சிகிச்சையில் உள்ள, நோயாளிகளுக்கு, அதிகாலையில் சாப்பிடும் முன், சரியான அளவில், கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. காலை, 8:00 மணிக்கு, வெண் பொங்கல், சாம்பர், முட்டை வழங்கப்படுகிறது. 11:00 மணிக்கு, துாதுவளை சூப், மதியம், 1:00 மணிக்கு தக்காளி சாதம், பொறியல் வழங்கப்படுகிறது.

பகல், 3:00க்கு, மூலிகை டீ, நவதானிய சுண்டல் வழங்கப்படுகிறது. மூலிகை டீயில், இஞ்சி, எலுமிச்சை, சித்தரத்தை, அதிமதுரம், திப்பிலி, மிளகு, கருப்பட்டி ஆகியவை சேர்த்து, டீ தயாரிக்கப்படுகிறது. இரவு, 8:00 மணிக்கு, புதினா சப்பாத்தி, குருமா வழங்கப்படுகிறது..இதன் வாயிலாக, நோயாளிக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அலோபதி சிகிச்சையுடன், சித்தா மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதால், கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைவர்.இவ்வாறு, அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்