Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏழை தொழிலாளர்களுக்கு 85 சதவீத தள்ளுபடி டிக்கெட்டை ரயில்வே வழங்குகிறது : காங்கிரஸுக்கு பாஜ., பதிலடி

மே 04, 2020 09:05

புதுடெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள் செல்லும் சிறப்பு ரயிலில் டிக்கெட் கட்டணத்தில் 85 சதவீதம் மானியமாக ரயில்வேயால் தரப்படுகிறது. மீதமுள்ள 15 சதவீதத்தை மாநில அரசுகள் தருகின்றன என்று காங்கிரஸ் கட்சிக்கு பாஜக பதிலடி தந்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல ரயிலில் செல்லும்போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்தக் கட்டணத்தை காங்கிரஸ் கட்சி செலுத்தும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்திருந்ததார். அதற்கு பாஜக பதில் தெரிவித்துள்ளது.

மேலும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ''பிரதமரின் கரோனா நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி கொடுக்க முடியும் உங்களால் ஏழை புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து டிக்கெட் வசூலிக்காமல் இருக்க முடியாதா?'' என ரயில்வே துறையைச் சாடியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து பாஜகவின் செய்தித்தொடர்பாளர் சம்பித் பாத்ரா ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். அதில், “புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்குச் செல்லும்போது அவர்களுக்கு சிறப்பு ரயிலில் டிக்கெட் கட்டணத்தில் 85 சதவீதம் மானியமாக ரயில்வே துறை வழங்குகிறது. மீதமுள்ள 15 சதவீதக் கட்டணத்தை அந்தந்த மாநில அரசுகள் செலுத்தலாம்.

மத்திய அரசு காட்டும் அக்கறையை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும் செலுத்த வேண்டும். மத்தியப் பிரதேச அரசு இந்தக் கட்டணத்தை செலுத்துகிறது. ராகுல் காந்தி இதை காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளிடம் தெரிவித்து பின்பற்றச் சொல்ல வேண்டும்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் ரயிலில் 1,200 பேர் அதிகபட்சமாகப் பயணிக்கிறார்கள். அவர்கள் ரயில் நிலையத்துக்கு வந்தபின் மாநில அரசு அதிகாரிகளிடம் டிக்கெட் வழங்கப்படுகிறது. மாநில அரசுகள் டிக்கெட் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்திவிட்டால் தொழிலாளர்களிடமே வழங்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

தலைப்புச்செய்திகள்