Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சினிமா, டிவி போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு அனுமதி வேண்டும்: அரசுக்கு பெப்சி கோரிக்கை

மே 04, 2020 11:22

சென்னை: “தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை தொடங்க அனுமதிக்க வேண்டும்,” என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி, தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனா காரணமாக லாக்-டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். சினிமா படப்பிடிப்புகளும் இல்லை என்பதால் நடிகர், நடிகைகளும் வீடுகளில் முடங்கியுள்ளனர். நாள்தோறும் சம்பளம் வாங்கும் சினிமா தொழிலாளர்கள், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதுபற்றி அவர் விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:
ஊரடங்கு அறிவிப்பதற்கு 5 நாட்கள் முன்பே, திரைப்படத்துறையின் அனைத்து வேலைகளையும் நிறுத்தி இன்றோடு 50 நாட்கள் ஆகிவிட்டது. நலவாரியம் மூலம் ரூ.1000, நன்கொடை வழியாகப் பெறப்பட்ட ரூ.1,500க்கான பொருட்கள், அமிதாப்பச்சன் மூலம் சோனி டிவி, கல்யாண் ஜூவல்லரிஸ் வழங்கிய ரூ.1,500 மதிப்பிலான உணவு பொருட்கள் ஆகியவற்றை வைத்து இந்த 50 நாள் வேலை முடக்கத்தில், பசிப்பிணியில் இருந்து எங்கள் தொழிலாளர்களை உயிரோடு காப்பாற்றி இருக்கிறோம்.

தற்போது ஊரடங்கு நீடிக்கப்பட்டதால், தொழிலாளர்கள் பட்டினிச்சாவுகளை எதிர்நோக்க வேண்டிய அபாயகரமான சூழ்நிலையில் உள்ளனர். தற்போது 17 தொழில் துறைகளுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கி இருப்பதை போல திரைப்படத்துறைக்கும், தொலைக்காட்சிகளுக்கும் நிபந்தனைகளோடு அனுமதி வழங்க வேண்டும். குறைந்தபட்சம் திரைப்படங்களுக்கு படப்பிடிப்பு அல்லாத பணிகளான ரீரெக்கார்டிங், டப்பிங் போன்ற போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கும் தொலைக்காட்சி படப்பிடிப்புக்கும் அனுமதித்தால், சம்மேளனத்தின் 40 முதல் 50 சதவீத தொழிலாளர்கள் வேலைச் செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அவர்கள் பட்டினிச் சாவில் இருந்து தப்பிக்க முடியும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்