Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

மே 04, 2020 11:34

சென்னை: தமிழகத்தில் வாட் வரி அதிகரிப்பு காரணமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 2.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வருவாய் இழந்த சாமானிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதிகளும் இதுவரை தமிழகத்திற்கு பெரிய அளவில் விடுவிக்கப்படவில்லை. இதனால் தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்நிலையில் நிதி வருவாயை பெருக்குவதற்காக பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தி உள்ளது. இதனால் தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 2.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.72.28 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 65.71 ஆகவும் விற்கப்பட்டது.

பெட்ரோல் விலையில் 3.25 ரூபாய் உயர்த்தப்படுவதால் 75.53 காசுகளாகவும். டீசல் விலை லிட்டருக்கு 2.50 உயர்த்தப்படுவதால் ரூ.68.21 ஆக விற்கப்படுகிறது. இந்த விலை  நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக சரிந்துள்ள நிலையில் இந்தியாவில் அதற்கு தகுந்தாற் போல் விலை குறைப்பு செய்யப்படவில்லை. அதற்கு முற்றிலும் மாறாக நிதி வருவாயை அதிகரிக்க வேண்டி பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி அதிகரிக்கப்பட்டு மேலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்த சாமானிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பெட்ரோல், டீசல் விலை கிடு,கிடு உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் நிலத்தடி நீரை நம்பி பம்ப் செட் வைத்து விவசாயம் செய்து வந்த விவசாயிகள் டீசல் விலை உயர்வால் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்