Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா நோய்த்தொற்றின் மையமான கோயம்பேடு சந்தை மூடல்

மே 05, 2020 06:10

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலுக்கு வழிவகுத்த, சென்னை கோயம்பேடு மார்க்கெட், இன்று(மே 5) முதல் மூடப்படுவதாக, அங்காடி நிர்வாக குழு அறிவித்துள்ளது. இந்த மார்க்கெட், பூந்தமல்லியை அடுத்த திருமழிசைக்கு மாற்றப்பட்டு, வரும், 7ம் தேதி முதல் செயல்படும்.

தமிழகத்தில், குறைவது போல இருந்த கொரோனா தொற்று, மீண்டும், கோரதாண்டவம் ஆடத் தொடங்கி விட்டது. சென்னையில் அதிகமாக இருந்த தாக்கம், மற்ற மாவட்டங்களுக்கும் பரவி விட்டது. சென்னை கோயம்பேடு மார்க்கெட் தான், கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம். எனவே, கொரோனா பரவலை தடுக்க, மார்க்கெட் இன்று முதல் மூடப்படுகிறது.

இதுகுறித்து, கோயம்பேடு அங்காடி நிர்வாக குழு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கோயம்பேடு மார்க்கெட்டில், வியாபாரிகள், பணியாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, கோயம்பேடு அங்காடி, இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.

பொதுமக்களுக்கு காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்கள் மக்களை சென்றடையவும், மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, திருமழிசையில் வரும், 7ம் தேதி முதல், தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை மார்க்கெட் செயல்படும். அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த சிறு வியாபாரிகள், திருமழிசை வந்து காய்கறிகளை வாங்கி கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, கோயம்பேடு மார்க்கெட்டில் அங்காடி நிர்வாக குழு பணியாளர்கள், அலுவலர்கள், அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி துவக்கி உள்ளது. அடுத்த கட்டமாக, காய்கறி விற்பனைக்கு சென்ற, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், பணியாளர்களுக்கும், பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

தலைப்புச்செய்திகள்