Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பஞ்சாப்பில் வீட்டுக்கே சென்று மது வழங்கல்: மதுப்பிரியர்கள் குவிவதை தடுக்க அதிரடி நடவடிக்கை

மே 06, 2020 05:53

சண்டிகார்: “பஞ்சாப்பில் வீட்டுக்கே சென்று மதுபானம் வழங்கப்படும்,” என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. மதுபானக் கடைகளில் மதுப்பிரியர்கள் குவிவதை தடுக்கும் வகையில் வீட்டுக்கே சென்று மதுபானங்கள் கொடுக்க பஞ்சாப் அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு மூன்றாவது கட்டத்தில் இருக்கிறது. வரும் மே 17ம் தேதி பொது முடக்கம் முடிவுக்கு வரும். தற்போது தொடர்ந்து 44 நாட்களுக்கும் மேலாக நாடு பொது முடக்கத்தில் இருந்து வருவதால், வர்த்தகம் முடங்கியுள்ளது.

அனைத்து வகையான கடைகள் மூடப்பட்டு தற்போதுதான் பாதிப்பு அதிகம் இல்லாத இடங்களில் வர்த்தகம் சிறிது சிறிதாக திறக்கப்பட்டு வருகிறது.
எவையெல்லாம் திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. மதுபானக் கடைகள் திறக்கலாம் என்பது அதில் ஒன்று. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் மதுபானக் கடைகள் நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டது. மக்கள் தனி மனித இடைவெளியைப் பின்பற்றாமல், முண்டியடித்துக் கொண்டு சரக்கு வாங்கிச் சென்றனர். இதனால், டெல்லி உள்பட பல இடங்களில் கடைகளை மூடினர்.

இதை தவிர்க்கும் வகையில் பஞ்சாப் மாநில அரசு வீட்டுக்கே சென்று மதுபானம் கொடுக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சமூகப் பரவலை தடுக்க, தனி மனித இடைவெளியை மேற்கொள்ள உதவும் என்று அந்த மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. டெல்லி அரசு மதுபானங்களின் மீது நேற்று 70 சதவீதம் சிறப்பு வரியை அறிவித்து இருந்தது. கர்நாடகமும் உயர்த்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஆந்திர அரசு மதுபானங்களின் விலையை சுமார் 25 சதவீதம் நேற்றுமுன்தினம் உயர்த்தி இருந்தது. நேற்றும் 50 சதவீதம் உயர்த்தியுள்ளது. மொத்தம் 75 சதவீதம் உயர்த்தியுள்ளது. ஆனாலும், மதுப்பிரியர்கள் குடிப்பதை நிறுத்தவில்லை. 
கர்நாடகா மாநிலம் நேற்று மட்டும் ரூ. 4 கோடிக்கு விற்பனை செய்து இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. கர்நாடகாவில் மட்டும் ஒரே நபர் ரூ. 52,841 ரூபாய்க்கு சரக்கு வாங்கி இருந்தார். நேற்று ஒரே நாளில் மட்டும் 68 கோடி ரூபாய்க்கு ஆந்திராவில் மதுபானம் விற்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மே 7ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது. ஆனால், விலை உயர்வு குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. ஊரடங்கு உத்தரவால் வாழ்தாரத்தை இழந்து தவிக்கும் பொதுமக்கள் ஏற்கனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் மதுபானம் விலை அதிகரித்தால் குடிமகன்கள் பாடு திண்டாட்டம் தான்.

தலைப்புச்செய்திகள்