Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் 711 கன்டெய்ன்மென்ட் மண்டலங்கள்: அரசு அறிவிப்பு

மே 06, 2020 05:56

சென்னை: தமிழகத்தில் கன்டெய்ன்மென்ட் ஜோனில் உள்ள பகுதிகள் எவை? எவை? என்பது குறித்து தமிழக அரசு விரிவான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, தமிழகத்தில் 711 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக (கன்டெய்ன்மென்ட் ஜோனாக ) அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மே மாதம் 1ம் தேதி முதலே அதிவேகமாக அதிகரித்து வருகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு கொரோனா பரவிய நிலையில் இந்த பாதிப்பு சில நாட்களில் மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. சென்னையில் மட்டும் 266 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சென்னையில் கொரோன பாதித்தவர்களின் எண்ணிக்கை மாநிலத்திலேயே மிக அதிகமாக 1,724 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்றுமுன்தினம் 15 மாவட்டங்களில் கொரோனா பரவி இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கட்டுப்பாட்டில் உள்ள கன்டெய்ன்மென்ட் ஜோன் எவை? எவை? என்பது குறித்து தமிழக அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் 711 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக ( கன்டெய்ன்மென்ட் ஜோனாக ) அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மிக அதிகமாக சென்னையில் தான் கட்டுப்பாட்டு பகுதிகள் அதிக அளவில் உள்ளன. 189 பகுதிகள் சென்னையில் கன்டெய்ண்மெண்ட் ஜோன்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (இந்த லிஸ்ட் கடந்த 2ம் தேதி நிலவரம் ஆகும். புறநகர் உள்பட சென்னையில் இன்றைக்கு 357 பகுதிகள் ஆகும்) கோவையில் 28 இடங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் நான்கு பகுதிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 இடங்களும் கட்டுப்பாட்டு பகுதிகள் ஆகும்.

கடலூர் மாவட்டத்தில் 21 இடங்களும், தர்மபுரியில் ஒரு இடமும், திண்டுக்கல் மாவட்டத்தில் 19 இடங்களும், ஈரோடு மாவட்டத்தில் 24 இடங்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 இடங்களும், காஞ்சிபுரத்தில் 10 இடங்களும், கன்னியாகுமரியில் 5 இடங்களும் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் 7 இடங்களும், மதுரையில் 42 இடங்களும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 16 இடங்களும் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் ஆகும்.

நாமக்கல் மாவட்டத்தில் 21 இடங்களும், நீலகிரி மாவட்டத்தில் 3 இடங்களும், பெரம்பலூர் மாவட்டத்தில் 9 இடங்களும், புதுக்கோட்டையில ஒரு இடமும், ராமநாதபுரத்தில் 28 இடங்களும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 இடங்களும், சேலம் மாவட்டத்தில் 13 இடங்களும், சிவகங்கை மாவட்டத்தில் 15 இடங்களிலும், தென்காசி மாவட்டத்தில் 7 இடங்களும், தஞ்சாவூரில் 10 இடங்களும், தேனி மாவட்டத்தில் 6 இடங்களும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆறு இடங்களும் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் 24 இடங்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 இடங்களும், திருவாரூர் மாவட்டத்தில் 12 இடங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 19 இடங்களும், திருநெல்வேலியில் 14 இடங்களும், திருப்பூர் மாவட்டத்தில் 31 இடங்களும், திருச்சி மாவட்டத்தில் 27 இடங்களும், வேலூர் மாவட்டத்தில் 6 இடங்களும், விழுப்புரம் மாவட்டத்தில் 31 இடங்களும், விருதுநகர் மாவட்டத்தில் 9 இடங்களும் கன்டெய்ன்மென்ட் எனப்படும் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்ட 711 கட்டுப்பாட்டு பகுதிகள் என்பது ஒரு குறிப்பிட்ட தெரு, ஒரு குறிப்பிட்ட கிராமம், நகரத்தின் குறிப்பிட்ட பகுதிகள் என்ற அளவிலேயே கட்டுப்பாட்டுப்பகுதிளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்த மாவட்டமோ, மொத்த நகரமோ அல்லது அதை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்துமோ கட்டுப்பாட்டில் உள்ளவையாக அறிவிக்கப்படவில்லை.

தலைப்புச்செய்திகள்