Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முஸ்லீம் நாட்டில் முதல் இந்து பைலட்

மே 06, 2020 06:05

இஸ்லாமாபாத்: இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரை தனது விமானப்படையின் பைலட்டாக நியமித்துள்ளது பாகிஸ்தான் அரசு. வரலாற்றிலேயே இப்படி ஒரு சம்பவம் இதற்கு முன் நடந்தது இல்லை என்பதால், இந்நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருவதுடன் பாகிஸ்தானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும் எப்போது சுதந்திரம் பெற்றனவோ, அப்போதே ஆரம்பித்துவிட்டன சண்டை, சச்சரவு, மோதல்கள். அது இன்னும் தீராமல், ஓயாமல் தொடர்ந்து வருகிறது. நேரடியாக மோதி கொள்ளவில்லையே தவிர, முறைமுகமாக பயங்கரவாதிகளை தூண்டிவிட்டு அடிக்கடி சீண்டி வந்து கொண்டிருக்கிறது பாகிஸ்தான்.

இதனிடையே அங்கு வாழும் இந்துக்களை துன்புறுத்துவதாகவும் செய்திகள் கசிந்தன. அதேபோல, மதமாற்றம் செய்து கட்டாயம் கல்யாணம் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டன. இப்படிப்பட்ட சமயத்தில்தான் ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இந்து மதத்தை சேர்ந்த ஒரு இளைஞரை தனது விமான படையின் பைலட்டாக பாகிஸ்தான் நியமனம் செய்திருக்கிறது.

சிந்து மாகாணத்தில் தர்பார்கர் என்ற மாவட்டம் உள்ளது. இந்த பகுதியில் இந்துக்கள் அதிகமாக வசிக்கிறார்கள். இவர்களின் அடிப்படை பிரச்சனைகளும் அதிகம். சரியான சாப்பாடு, தண்ணீர் இவர்களுக்கு கிடைப்பதில்லை. அப்படி பின்தங்கிய பகுதியை சேர்ந்தவர்தான் ராகுர்தேவ். இந்து மதத்தை சேர்ந்தவர். இவர்தான் அந்நாட்டு விமானப்படையில் பைலட்டாக சேர்ந்துள்ளார். இந்து மதத்தை சேர்ந்த ஒருவர் அங்கு பைலட் ஆவது இதுதான் முதல் முறை.

ராகுலின் இந்த நியமனம் குறித்து பாகிஸ்தானிய ஹிந்து பஞ்சாயத்து செயலாளர் ரவி தவானி கூறுகையில், "இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் நிறைய பேர் ராணுவம், மருத்துவம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் வேலை பார்த்து வருகிறார்கள். பாகிஸ்தான் அரசாங்கம் இது போன்று சிறுபான்மையினர் மீது கவனம் செலுத்த தொடங்கினால் அடுத்து வரும் நாட்களில், பல ராகுல்தேவ்கள் நாட்டுக்காக சேவை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்," என்றார்.

பல ராகுல்தேவ்கள் இப்படி உருவாகினால் வரலாற்றின் பிழைகளும் அடியோடு மாற துவங்கும். சகிப்புத்தன்மைகள் பெருக, பெருக பிளவுகளும், பூசல்களும் மொத்தமாக தகர்ந்து விழ ஆரம்பிக்கும் என்று கூறுபவர்கள் பாகிஸ்தானின் இந்த செயலை வரவேற்பதுடன் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்