Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காவல்துறையினரை டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு தர வைப்பதா?: வேல்முருகன் கண்டனம்

மே 06, 2020 06:11

சென்னை: “காவல்துறையினரை மதுக்கடைகளுக்கு பாதுகாப்பு தர வைப்பது, ஊரடங்கு காலத்தில் அவர்களுக்கு மேலும் பணிச்சுமையை அதிகரிக்க வைக்கும் செயல். எனவே, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது,” என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
உலக வரலாற்றிலேயே இந்தக் கொரோனாவைவிடக் கொடிய கொள்ளைநோய் இதுவரை வந்ததில்லை. இதற்கு மருந்தோ, தடுப்பூசியோ இல்லாதது மட்டுமல்ல; அவை கண்டுபிடிக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் இந்தப் பூமியில் மனித இனத்தையே பூண்டற்றுப் போகச் செய்துவிடும் ஆபத்து கூட உள்ளது என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

டாஸ்மாக் ஊழியர்களே, மதுக்கடைகளை திறந்தால் நிலைமை விபரீதமாகும் என டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். டாஸ்மாக்கைத் திறக்கும் இந்த விபரீத முடிவை எந்தவிதத்திலும் நியாயப்படுத்தவே முடியாது. மதுபானக் கடைகள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையிலான கட்டமைப்பு இல்லாதவை. குடிமக்கள் கும்பலாக மதுவை குடிப்பதும், எச்சில் துப்புவதும், வாந்தி எடுப்பதுமான சூழ்நிலையில் நோய் பரவுதலை ஊக்கப்படுத்தும். பொதுப் போக்குவரத்து இல்லாததால் மதுக்கடை ஊழியர்கள் வெளியூர்களிலிருந்து வருவதும் திரும்பிச் செல்வதும் முடியாத காரியம்.

ஊரடங்கினால் வேலை, வருமானம், உணவு அனைத்தையுமே இழந்து நிற்கும் மக்களை குடிக்க வைப்பது, அவர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம் மட்டுமல்ல. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுமாகும். ஊரடங்குப் பணியில் உள்ள காவல்துறையினரை மதுக்கடைகளுக்கு பாதுகாப்பளிக்க வைப்பது அவர்களது பணிச்சுமையை அதிகப்படுத்துவது மட்டுமல்ல. அவர்களைக் கேவலப்படுத்துவதுமாகும். எனவே, மதுக்கடை திறப்பை நிறுத்திவைக்க வேண்டும்.

தமிழக மக்களின் கருத்தும் இதுதான். கொரோனா மக்கள் பிரச்சனையோ, ஆள்வோரின் பிரச்சனையோ இல்லை. சுவர் இல்லாமல் சித்திரம் தீட்ட முடியாது என்பதுபோல், பொருளாதாரம் இன்றி லாபம் பார்க்க முடியாது. அதனால்தான் "மதுக்கடையைத் திறக்காதே" என தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கிறது.

இவ்வாறு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்