Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எளிய முறையில் நடந்த அமைச்சர் பெஞ்சமின் மகன் திருமணம்

மே 06, 2020 06:15

சென்னை: தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் மகன் திருமணம் அவரது இல்லத்திலேயே எளிய முறையில்  நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

தமிழக அமைச்சரவையில் இப்படி ஒரு அமைச்சர் இருக்கிறாரா? என்பதே பலருக்கும் தெரியாது. அந்தளவிற்கு அமைதியானவர் அமைச்சர் பெஞ்சமின். கடந்த 2011-2016-ல் சென்னை மாநகராட்சியின் துணை மேயராக இருந்தவர். எந்த புகாரிலும் இவர் சிக்காததால் இவருக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுத்து அமைச்சராக ஆக்கினார் ஜெயலலிதா.

இந்நிலையில், அமைச்சர் பெஞ்சமினின் இளைய மகன் சாம்சனுக்கும், ஸ்ரீ சாத்திகா என்பவருக்கும் நேற்று  (5ம் தேதி) திருமணம் நடத்துவது என இரு வீட்டார் தரப்பிலும் கடந்த பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக பிரம்மாண்ட திருமண மண்டபம் ஒன்றிலும் கூட முன்பதிவு செய்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தாக்கத்தால் எல்லாம் தலைகீழாக மாறியது.

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் தனது இளைய மகனுக்கு திருமணம் நடத்த விரும்பிய அமைச்சர் பெஞ்சமினுக்கு கொரோனா ஊரடங்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இருப்பினும் ஏற்கனவே திட்டமிட்டபடி திருமணத்தை நடத்துவதில் மணமக்கள் வீட்டார் தரப்பு உறுதியாக இருந்தனர். இதையடுத்து அமைச்சர் பெஞ்சமின் வீட்டிலேயே வைத்து மிக நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து எளிய முறையில் நேற்று காலை திருமணம் நடைபெற்றது.

இதனிடையே மகன் திருமணத்தை ஒட்டி திருவேற்காடு நகராட்சியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவு பணியாளர்களை அழைத்து அவர்களுக்கு இனிப்பு, வேட்டி-சட்டை மற்றும் சேலைகளை அமைச்சர் பெஞ்சமின் வழங்கினார். இந்நிலையில், மணமக்கள் சாம்சன் - ஸ்ரீசாத்திகா இருவருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்