Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குடை பிடித்து வராதவருக்கு மது கிடையாது: திருப்பூர் கலெக்டர் அறிவிப்பு

மே 06, 2020 07:24

திருப்பூர்: “திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக குடை பிடித்து வருபவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடையில் மதுபானம் வழங்கப்படும்,” என்று மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வரும் 17ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வாணிபக்கழக மதுபானக்கடைகள் சில கட்டுப்பாடுகளுடன் மதுபானக்கடைகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே, திருப்பூர் மாவட்டத்தில் இன்று 7ம் தேதி முதல் மதுபானக்கடைகள் மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படுகிறது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள மதுபானக்கடைகள் மட்டும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு திறக்க அனுமதிக்கப்படுகிறது. மதுபானக்கடைகளில் கூட்டம் கூடுதல் தவிர்க்கப்பட வேண்டும். ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி 6 அடி தூரம் இருக்க வேண்டும். மதுக்கடைகளில் ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.
மதுபானக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுகிறது. அனைத்து மதுபானக்கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு மதுபானக்கடைகளிலும் தேவைக்கேற்ப கூடுதல் நபர்களை பணியமர்த்தி கூட்டம் சேர்வை தவிர்க்க வேண்டும்.

சமூக இடைவெளியை தீவிரமாக கடைபிடிக்கும் பொருட்டு மதுபானக்கடைகளுக்கு வருபவர்கள் தவறாது குடையுடன் வந்து குடைபிடித்து நின்று மதுபானங்கள் பெற்றுச் செல்ல வேண்டும். குடையுடன் வராதவர்களுக்கு மதுபான வகைகள் வழங்கப்படமாட்டாது. மதுபானக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் தனிநபர் சுத்தம் பேணப்படுவதோடு மதுக்கடை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

மேலும் பணியாற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும். மேற்கண்ட நிபந்தனைக்கு உட்பட்டு மதுபானக்கடைகள் திறக்க அனுமதி அளித்து உத்தரவிடப்படுகிறது. பார்கள் திறக்க அனுமதி இல்லை. மேற்கண்ட நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்