Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சரக்கை வாங்க சென்று கொரோனாவை வாங்கி விடாதீர்கள்: குஷ்பு அறிவுரை

மே 06, 2020 10:50

சென்னை: சரக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக முண்டியடித்து ஒருவர் மீது ஒருவர் விழுந்து வாங்குவதால் கொரோனாவையும் வாங்கி வர நேரிடலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறி உள்ளார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படுவது பற்றி கூறியதாவது:-

அரசாங்கத்துக்கு வருமானம் முக்கியம். வருமானத்தை ஈட்டுவதில் நாடு முழுவதும் மதுவும், சிகரெட்டும் தான் முக்கிய இடத்தை பிடித்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. இந்த இரண்டையும் ஒழிக்க வேண்டும் என்று பேசலாம் ஆனால் முற்றிலுமாக எந்த அரசாங்கமும் ஒழிக்கப் போவதில்லை. அதற்கு முக்கிய காரணம் வருமானம் தான். ஆனால் படிப்படியாக பயன்பாட்டை குறைக்கலாம்.

சிகரெட்டும் மிக மோசமானது என்பது தெரிந்தது தான். ஆனாலும் உலக அளவில் அதை ஒழித்து விட முடியவில்லை. எச்சரிக்கை படங்களை போட்டு முடிந்தவரை குறைக்கிறார்கள் அவ்வளவுதான்.

மதுக்கடைகள் திறக்கப்படும் இந்த நேரத்தில் தற்போதைய நிலவரங்களையும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். சிவப்பு மண்டலத்தில் திறக்கவில்லை என்றாலும் பக்கத்தில் திறக்கப்படும் கடைகளுக்கு சிவப்பு மண்டலத்திலிருந்து போக மாட்டார்களா?

மக்களும் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கட்டுப்பாடு காக்க வேண்டியது அவசியம். கர்நாடகத்தில் இரண்டு நாளில் ரூ.242 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. நான்கு கிலோ மீட்டர் தூரம் வரை கியூவில் நின்று மது வாங்கி இருக்கிறார்கள். கியூவில் நின்றாலும் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். சரக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக முண்டியடித்து ஒருவர் மீது ஒருவர் விழுந்து வாங்குவதால் கொரோனாவையும் வாங்கி வர நேரிடலாம். இதையும் மது வாங்க செல்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முறையான கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகள் செயல்பட வேண்டும். முகக்கவசம் அணிந்து செல்வது, இடைவெளியை கடைப்பிடிப்பது ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்

தலைப்புச்செய்திகள்