Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி, கத்தரி வெயிலால் 3 வேளையும் ஷவர் குளியல்

மே 06, 2020 12:04

புதுச்சேரி: புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி மூன்று வேளையும் கத்திரி வெய்யிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க ஷவரில் குளிக்க வைக்கப்படுகிறது. இதுதவிர உடம்பில் சூடு சேறாமல் இருக்க தர்ப்பூசணி, கிர்ணி போன்ற பழ வகைகளும் லட்சுமி யானைக்கு நாள்தோறும் வழங்கப்படுகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நோய் பரவலைத் தடுப்பதற்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியது முதல் வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலும் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. மணக்குள விநாயகர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் செல்லப்பிள்ளையாக லட்சுமி யானை திகழ்ந்து வருகிறது. நாள்தோறும் காலை, மாலை என இருவேளைகளிலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது லட்சுமி யானை.

கடந்த 40 நாட்களாக அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால், கோவிலுக்கு வராமல் நான்கு சுவற்றிற்குள் முடங்கியுள்ளது. இதனால், புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான பக்தர்கள் மீண்டும் லட்சுமி யானையை எப்போது பார்ப்போம் என ஏக்கத்தில் உள்ளனர். இந்நிலையில் லட்சுமி யானை கோவில் அருகில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் வைத்து பராமரிக்கப்படுகிறது.

தற்போது கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைக்க தொடங்கியிருக்கிறது. புதுச்சேரியிலும், பகல் நேரத்தில் அனல் காற்று வீசி வருகிறது. இதனால் ஏற்படும் வெப்பத்தை தணிக்கும் பொருட்டு மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு 3 வேளையும் ‌ஷவர் குளியலுக்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

ஷவர் குளியலின் போது லட்சுமி யானை சின்னஞ்சிறு குழந்தையை போன்று தண்ணீரில் உற்சாகமாக ஆட்டம் போடுகிறது. மேலும் தும்பிக்கையால் தண்ணீரை உடல் முழுவதும் பீய்ச்சி அடித்தும் சேட்டை செய்து வருகிறது. மேலும் லட்சுமி யானைக்கு நாள்தோறும் உணவாக அரிசி சாதம், 5 வித தானியங்களை கொண்ட உணவு, தர்பூசணி, கிர்ணி பழம் போன்றவை அளிக்கப்படுகின்றது.

யானையை குளிக்க வைக்கும்போதும், உணவு தயாரிப்பதற்கு முன்பும் யானை பாகன்கள் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தும், கையுறை மற்றும் முகக்கவசம் அணிந்தும் யானைக்கு பணிவிடை செய்து வருகின்றனர். அதேபோல் கத்திரி வெயில் காலத்தில் யானைக்கு நோய் வராமல் தடுக்க கால்நடை மருத்துவர்கள் யானையை பரிசோதனை செய்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்