Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசுக்கு எதிராக, வீட்டிற்கு முன் கூடி முழக்கமிடுங்கள்: ஸ்டாலின் அழைப்பு

மே 06, 2020 01:00

சென்னை: கொரோனா தொற்றை ஒழிப்பதில் தோல்வியடைந்த அரசுக்கு எதிராக நாளை ( மே 7ம் தேதி ) அவரவர் வீட்டின் முன் கூடி முழக்கமிடுங்கள் என திமுக தலைவர் ஸ்டாலின், கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், நாளை (மே 7) முதல் தமிழகம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் தவிர்த்து அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. கொரோனா பரவி வரும் சூழலில் அரசின் இந்த முடிவை பல தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட வீடியோவில் பேசியதாவது: கொரோனா என்னும் கொடூர வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது ஏற்படுத்தும் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறப்பதாக அறிவித்திருக்கிறார்கள். மக்கள் அதிகமாக கூடக்கூடாது என சொல்லும் அரசு தான், டாஸ்மாக் கடைகளை திறக்கிறது. அரசு போட்ட சட்டத்தை அரசே மீற சொல்கிறது. இந்த நடவடிக்கையினாலேயே நோய்த் தொற்று அதிகரிக்க போகிறது.

கொரோனா நோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்யாமலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், மீட்டு நடவடிக்கைகள் என கவலைப்படாமல் மதுபானக் கடைகளை திறப்பதில் மட்டும் ஆர்வத்துடன் செயல்படும் தமிழக அரசை கண்டிக்கும் வகையிலும், தமிழகத்திற்கு போதிய நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்தும் மே 7ம் தேதி ஒருநாள் மட்டும் கருப்பு சின்னம் அணிவது என்று திமுக தலைமையிலான கூட்டணி கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மே 7ம் தேதி காலை 10 மணிக்கு அவரவர் வீட்டின் முன்பு கூடி, கொரோனா ஒழிப்பதில் தோல்வியடைந்த அதிமுக அரசை கண்டிக்கிறோம் என 15 நிமிடங்கள் முழக்கமிடுங்கள். 5 பேருக்கு மேல் கூடுவதை தவிர்க்கவும். இந்த நேரத்தில் போராட்டம் நடத்தலாமா எனக் கேட்கலாம். மக்களை காக்க வேண்டிய நேரத்தில் காக்கத்தவறிய அரசுக்கு எதிராக எப்போதும் போராடலாம், அதில் தப்பில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்